உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லிக்கு தண்ணீர் திறந்து விட ஹிமாச்சலுக்கு கோர்ட் உத்தரவு

டில்லிக்கு தண்ணீர் திறந்து விட ஹிமாச்சலுக்கு கோர்ட் உத்தரவு

புதுடில்லி, தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் தலைநகர் டில்லிக்கு, வினாடிக்கு 137 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி, ஹிமாச்சல பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது டில்லிக்கு சென்றடைவதை உறுதி செய்யும்படி, ஹரியானா அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.யமுனை நதியில் இருந்து மாநிலங்களுக்கு இடையே நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, யு.ஒய்.ஆர்.பி., எனப்படும் மேல்யமுனை நதி வாரியம், 1995ல் உருவாக்கப்பட்டது. உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் தேசிய தலைநகர் டில்லி பிராந்தியம் ஆகியவற்றுக்கு இடையே, நதி நீரை உரிய முறையில் பகிர்ந்து கொள்வதை இந்த வாரியம் உறுதி செய்கிறது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துஉள்ளது. இங்கு, கோடை வெயில் தீவிரமாக உள்ள நிலையில், தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.'டில்லி பிராந்தியத்துக்கு உதவுவதற்காக, ஹிமாச்சல பிரதேச அரசு தன்னிடம் கூடுதலாக உள்ள தண்ணீரை தருவதற்கு தயாராக உள்ளது. ஆனால், யமுனை நதி வரும் பாதையில் அமைந்துள்ள பா.ஜ., ஆளும் ஹரியானா அரசு, அதை விடுவிப்பதற்கு மறுத்து வருகிறது' என, டில்லி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை கால அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:டில்லியில் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் தீவிர மான பிரச்னையாக உள்ளது. இந்த நேரத்தில் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது.ஹிமாச்சல பிரதேசம் தன்னிடம் உபரியாக உள்ள தண்ணீரை திறந்து விடுவதற்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளது. இதன்படி, இன்று முதல், வினாடிக்கு 137 கன அடி வீதம் ஹிமாச்சல பிரதேசம் தண்ணீரை திறந்து விட வேண்டும். அது முழுமையாக டில்லிக்கு வந்து சேர்வதை, இடையில் உள்ள ஹரியானா அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

டில்லி அரசு வரவேற்பு

இந்த உத்தரவு குறித்து, டில்லி நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி நேற்று கூறியுள்ளதாவது:கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு உள்ள டில்லி மக்களுக்கு ஆறுதலாக சரியான தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம். இது, டில்லி மக்களின் வெற்றி. இது போன்ற நேரங்களில், எவ்வித பேதங்களும் இல்லாமல் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை