| ADDED : மே 03, 2024 02:00 AM
அரசு பள்ளி
மாணவிகளிடையே மோதல்
புதுடில்லி:வட மத்திய டில்லியின் குலாபி பாக் பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை சக மாணவி கூர்மையான பொருளால் தாக்கிதாக கூறப்படுகிறது. மாணவி படுகாயத்துடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் புதன்கிழமை பரவத் துவங்கியது.இதுபற்றி டில்லி போலீசார் தாமாக முன்வந்து விசாரணையை துவக்கினர். சம்பவம் நடந்தது டில்லியில் உள்ள அரசு பள்ளி ஒன்று என்பதை உறுதி செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் சிறுவர்கள் என்பதால், சிறார் சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.சிறுமியரின் எதிர்காலம் கருதி அவர்களை அடையாளப்படுத்தும் தகவல்களை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர். இரு மாணவிகளிடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருகிறது.ஜிம் பயிற்சியாளர் கொலை
வழக்கில் வாலிபர் கைது
புதுடில்லி:தெற்கு டில்லியின் திக்ரி பகுதியில் ஜிம் பயிற்சியாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 18 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.திக்ரி பகுதியைச் சேர்ந்த கவுரவ் என்ற ஜிம் பயிற்சியாளர். மார்ச் 6ம் தேதி இரவு ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.சொத்துத் தகராறில் சொந்த மகனைக் கொல்ல அவரது தந்தையே கூலிப்படையை ஏவியது தெரிய வந்தது. இதையடுத்து அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.அவர் கொடுத்த தகவலின் பேரில் சாஹில், அபிஷேக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். தியோலி பகுதியைச் சேர்ந்த லக்ஷய், 18, என்ற வாலிபரை தேடி வந்தனர். அவரை நேற்று கைது செய்தனர்.மகனை கொலை செய்ய கூலிப்படைக்கு 75 ஆயிரம் ரூபாய் தருவதாக கவுரவின் தந்தை பேரம் பேசியுள்ளார். திருமணத்திற்கு முதல் நாளில் கவுரவ் கொலை செய்யப்பட்டுள்ளார்.