உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேவகவுடா மகள் அனுசுயா போட்டி?

தேவகவுடா மகள் அனுசுயா போட்டி?

ராம்நகர்: சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, தேவகவுடாவின் மூத்த மகள் அனுசுயாவை களமிறக்க முயற்சி நடக்கிறது.ராம்நகர் சென்னப்பட்டணா தொகுதி ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனார். இதனால் அவர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

காங்., -- எம்.எல்.ஏ.,க்கள்

ராம்நகர் மாவட்டத்தில் சென்னப்பட்டணா உட்பட நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சென்னப்பட்டணாவிலும் வெற்றி பெற்றால், ராம்நகர் மாவட்டத்தை முழுமையாக கைப்பற்றலாம் என்பது, துணை முதல்வர் சிவகுமாரின் கணக்காக உள்ளது.இதனால் அவர் சென்னப்பட்டணாவில் போட்டியிட உள்ளதாகவும், அவர் எம்.எல்.ஏ.,வாக உள்ள, கனகபுரா தொகுதியில் தம்பி சுரேஷை நிறுத்தவும் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாயின.ஆனாலும், 'சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் உங்கள் குடும்பத்தினர் போட்டியிட வேண்டாம். ஒருவேளை தோற்றுப் போனால், உங்களுக்கு இருக்கும் பெயர் போய்விடும்' என,சிவகுமாரிடம், ஒக்கலிகர் சமூக அமைச்சர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.சென்னப்பட்டணாவில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று துடிக்கும் சிவகுமார், தனது மகள் ஐஸ்வர்யாவை அந்த தொகுதியில் களம் இறக்க யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.ஒருவேளை ஐஸ்வர்யா களமிறங்காவிட்டால், பா.ஜ., முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் மகள் நிஷாவை களம் இறக்கலாம் என்ற யோசனையும், சிவகுமாரிடம் உள்ளது.பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக போட்டியிட, முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் ஆசைப்படுகிறார். ஆனால் குமாரசாமி, தனது மகன் நிகிலை களம் இறக்க நினைக்கிறார்.நிகில், ஏற்கனவே தான் போட்டியிட்ட இரண்டு தேர்தல்களிலும் தோல்வி அடைந்தவர். மீண்டும் ஒரு முறை அவர் தோற்றுப்போனால், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்றும் குமாரசாமி யோசிக்கிறார்.

தேவகவுடா மகள்

பெண் வேட்பாளரை களம் இறக்கி காங்கிரஸ் வெற்றி பெற நினைத்தால், அதற்கும் பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி தலைவர்களும் பெண் வேட்பாளரை களம் இறக்க யோசித்து வருகின்றனர்.அந்த பெண் வேறு யாரும் இல்லை. தேவகவுடாவின் மகள் அனுசுயா தான். இவர் பெங்களூரு ரூரல் பா.ஜ.,- - எம்.பி., மஞ்சுநாத்தின் மனைவி ஆவார்.லோக்சபா தேர்தலில், பெங்களூரு ரூரலில் சிவகுமாரின் தம்பி சுரேஷை தோற்கடித்து வெற்றி பெற்றவர் தான் மஞ்சுநாத்.சென்னப்பட்டணா சட்டசபை தொகுதி, பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு வருகிறது.அனுசுயாவை களம் இறக்கினால், மஞ்சுநாத்துக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவால் அவர் எளிதில் வெற்றி பெற்று விடுவார். இதன் மூலம் சிவகுமார், சுரேஷுக்கு மீண்டும் ஒருமுறை அதிர்ச்சி வைத்தியம் அளிக்க, பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ