டில்லி காங்., தலைவராக தேவேந்திர யாதவ் நியமனம்
புதுடில்லி, டில்லி காங்கிரசின் இடைக்கால தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., தேவேந்திர யாதவை, அக்கட்சி தலைமை நேற்று நியமித்தது.காங்கிரஸ் மூத்த தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, 55, தன் டில்லி காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தங்கள் விருப்பத்திற்கு எதிராக, ஆம் ஆத்மியுடன் கட்சி தலைமை கூட்டணி அமைத்ததை தன் ராஜினாமாவுக்கான காரணங்களில் ஒன்றாக அவர் குறிப்பிட்டிருந்தார். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக, அர்விந்தர் சிங் லவ்லி தீவிர அரசியல் செய்து வந்த நிலையில், அக்கட்சியுடன் காங்., தலைமை கூட்டணி அமைத்தது. இது, லவ்லி உள்ளிட்ட தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால், அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், டில்லி காங்கிரசின் இடைக்கால தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ.,வான தேவேந்திர யாதவை, அக்கட்சி தலைமை நியமித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 'காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் உத்தரவின்படி, டில்லி காங்கிரசின் இடைக்கால தலைவராக தேவேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.முன்னாள் எம்.எல்.ஏ.,வான தேவேந்திர யாதவ், டில்லி பாத்லி சட்டசபை தொகுதியில் 2008 மற்றும் 2013ம் ஆண்டு களில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.எனினும், 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியின் ஆசிஷ் யாதவிடம் அவர்தோல்வியை தழுவினார்.