திருவனந்தபுரம், ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலேவை தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக கேரள ஏ.டி.ஜி.பி., அஜித்குமார், முதல்வர் அலுவலகத்தில் விளக்கம் அளித்ததாக வெளியான தகவல், கேரள அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக இருப்பவர் அஜித்குமார். இவர் முதல்வர் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவராகவும், விசுவாசமானவராகவும் அறியப்படுகிறார்.இவர், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலேவை கடந்த ஆண்டு மே மாதம், கேரளாவில் சந்தித்து பேசியதாக, காங்.,கை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். மேலும், திருச்சூர் தொகுதியில் பா.ஜ.,வின் சுரேஷ் கோபியை வெற்றி பெற செய்வதற்காக, கடந்த ஆண்டு திருச்சூர் பூரம் விழாவில் வேண்டுமென்றே குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், இந்த சதியில் அஜித்குமாருக்கு பெரும் பங்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.மேலும், மத்திய விசாரணை அமைப்புகளின் பிடியில் இருந்து முதல்வர் பினராயி விஜயனை காப்பாற்றவும் ஹோசபெலேவிடம் அவர் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். பினராயிக்கும், ஆர்.எஸ்.எஸ்.,க்கும் இடையிலான இடைத்தரகராக ஏ.டி.ஜி.பி., அஜித்குமார் செயல்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.ஆளும் இடது ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூ., கட்சியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்வர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி அஜித்குமார் விளக்கம் அளித்ததாக கேரள ஊடகங்களில் செய்தி வெளியானது. மேலும், சந்திப்பு நடந்ததை அவர் ஒப்புக் கொண்டதாகவும், தனிப்பட்ட முறையில் ஹோசபெலேவை சந்தித்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது எதிர்க்கட்சியினரை மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.“ஆர்.எஸ்.எஸ்., பொதுச் செயலரை தனிப்பட்ட முறையில் ஏ.டி.ஜி.பி., சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?” என, இந்திய கம்யூ., மாநில செயலர் பினாய் விஸ்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.“முதல்வரின் நேரடிப் பார்வையின் கீழ் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரி, ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்பின் பிரமுகரை சந்திக்கும்போது முதல்வரிடமோ, டி.ஜி.பி., இடமோ தகவல் தெரிவிக்க வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார்.இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.