உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சலுகையுடன் சொத்து வரி செலுத்த ஆக., 31 வரை அவகாசம் நீட்டிப்பு

சலுகையுடன் சொத்து வரி செலுத்த ஆக., 31 வரை அவகாசம் நீட்டிப்பு

பெங்களூரு : ஓ.டி.எஸ்., சலுகை முறையில், பெங்களூரு மாநகராட்சிக்கு, நான்கு மாதங்களில் 3,200 கோடி ரூபாய் சொத்து வரி வசூலாகி உள்ளது. இந்த சலுகை, வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.பெங்களூரில் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் இருக்கின்றனர். இவர்களுக்கு, 'ஒன் டைம் செட்டில்மென்ட்' எனும் ஓ.டி.எஸ்., முறையில் செலுத்தினால், நிலுவையில் உள்ள வரி மீதான வட்டியை முழுதுமாக ரத்து செய்வதுடன் அபராதத் தொகையில் 50 சதவீத தள்ளுபடியும் அளிக்கும் சிறப்பு சலுகையை பெங்களூரு மாநகராட்சி அறிவித்தது.ஏப்ரல் 1 முதல் ஜூலை 31ம் தேதி வரை சலுகைக் காலம் இருந்தது. இந்த நான்கு மாதங்களில், 3,200 கோடி ரூபாய் சொத்து வரி நிலுவை வசூல் ஆகி உள்ளது. கடந்தாண்டு, இந்த ஜூலை இறுதி வரை, 2,457.30 கோடி ரூபாய் மட்டுமே சொத்து வரி வசூலானது. இந்தாண்டு, 607 கோடி ரூபாய் கூடுதலாக வசூலாகி உள்ளது.ஓ.டி.எஸ்., சலுகை மூலம், நீண்ட ஆண்டுகளாக பாக்கி வைத்திருந்த 1.14 லட்சம் பேர், 380.63 கோடி ரூபாய் சொத்து வரி செலுத்தி உள்ளனர். இறுதி நாளில் இணையதளம் சரியாக செயல்படாததால், ஏராளமானோரால் சலுகை பலனை பெற முடியாமல் போனது.இதனால் கூடுதல் அவகாசம் வழங்கும்படி, மாநகராட்சியை பல்வேறு தொழில் அமைப்பினரும், குடியிருப்பு நல சங்கங்களும் வலியுறுத்தின. இதன் அடிப்படையில், சலுகை முறையில் சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசத்தை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து, மாநகராட்சி நேற்று உத்தரவிட்டுள்ளது.நேர்மையான முறையில் சொத்து வரி செலுத்துவோருக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காகவும், பொதுமக்களின் கோரிக்கையின்படியும், ஓ.டி.எஸ்., சலுகை ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.- சிவகுமார், துணை முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்