பெங்களூரு : கன்னட திரையுலகின் பிரபல நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அபர்ணா, நேற்று முன்தினம் நள்ளிரவு மரணமடைந்தார்.கன்னடத்தில் 1984ல் வெளிவந்த மசணத ஹூவு திரைப்படம் மூலம், கன்னட திரையுலகில் நுழைந்தவர் நடிகை அபர்ணா. இந்த படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில், சிறப்பான நடிப்பால் மக்களால் பேசப்பட்டார்.அதன்பின் சங்க்ராமா, இன்ஸ்பெக்டர் விக்ரம், ஒலவின ஆசரே உட்பட, பல வெற்றி படங்களில் நடித்தார். விஷ்ணுவர்த்தன், அம்பரிஷ், ராஜ்குமார் என, ஸ்டார் நடிகர்களுடன் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் அதிகம் இருந்தும், நிகழ்ச்சி தொகுப்பில் அதிக ஆர்வம் காண்பித்தார்.நம்ம மெட்ரோவில் ரயில் வருவது, நிற்பது, புறப்படுவது என மற்ற தகவல்களை பயணியருக்கு கூறுவது இவரது குரல் தான். பெங்களூரின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திலும் இவரது குரலை கேட்கலாம்.திரைப்படம், நிகழ்ச்சி தொகுப்புடன், சின்னத்திரையிலும் ஜொலித்தார். 'மூடலமனே', 'முக்தா' உட்பட ஏராளமான தொடர்களில் நடித்தார். 2013ல் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக இருந்தார். திரைப்படம், சின்னத்திரையில் அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்தன. இந்த நிலையில், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், இரண்டு ஆண்டுகளாக நடிப்பை விட்டு விலகினார். சிகிச்சை பெற்று வந்த அபர்ணா, நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார்.அவரது மறைவுக்கு திரையுலகத்தினர், அரசியல் தலைவர்கள், பெங்களூரு மெட்ரோ நிறுவனத்தினர் உட்பட பலரும் இரங்கல்தெரிவித்துள்ளனர்.