| ADDED : ஏப் 06, 2024 10:31 PM
சண்டிகர்:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர்.டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மாதம் 21ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.இதைக் கண்டித்து இன்று நாடு முழுதும் கூட்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., தினேஷ் சதா நேற்று கூறியதாவது:ஜனநாயகத்தை காப்பாற்ற நாடு முழுதும் இன்று நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் திரளாக பங்கேற்கின்றனர்.பஞ்சாபின் ஷஹீத் பகத்சிங் நகர் மாவட்டம் கட்கர் கலனில் இன்று நடக்கும் போராட்டத்தில் பொதுமக்களும் திரளாக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாடுகள் ஆதரவு!
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சருமான கோபால் ராய் கூறியதாவது:புதுடில்லி ஜந்தர் மந்தரில் இன்று காலை 11:00 மணிக்கு உண்ணாவிரதம் துவங்குகிறது. டில்லி மாநகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர். டில்லியில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க முடியாதவர்கள் வீட்டிலிருந்தே உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவர். மேலும் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நார்வே, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் ஆம் ஆத்மியின் நாடு தழுவிய இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.