| ADDED : ஆக 20, 2024 01:57 AM
புனே,மஹாராஷ்டிராவில் சக பயணியர் மற்றும் சி.ஆர்.பி.எப்., கான்ஸ்டபிளை தாக்கிய பெண் பயணி, விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். மஹாராஷ்டிராவின் புனேவில் இருந்து, டில்லிக்கு செல்லும் விமானத்தில் சுரேகா சிங், 44 என்பவர், தன் கணவருடன் ஏறினார். இருக்கை பகிர்வு தொடர்பாக அவருக்கும், அருகில் இருந்த அன்விதிகா, ஆதித்யா ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது. இது வாக்குவாதமாக மாறி, கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து, விமானத்துக்குள் சென்று சி.ஆர்.பி.எப்., கான்ஸ்டபிள் பிரியங்கா ரெட்டி விசாரணை செய்தார். அவரையும் சுரேகா தாக்கி, கடித்ததாக சொல்லப்படுகிறது. நிலைமை மோசமானதை அடுத்து, சுரேகா சிங் மற்றும் அவரது கணவர் விமானத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இருவரிடமும் விசாரணை நடத்திய போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என, அவர்களை வலியுறுத்தினர். பின்னர், இருவரும் டில்லி செல்ல அனுமதிக்கப்பட்டனர். 'உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்குக்கு செல்ல முற்பட்ட அந்தப் பெண், மிகுந்த மன உளைச்சல் காரணமாக வன்முறையில் ஈடுபட்டார்' என, போலீசார் தெரிவித்தனர்.