பெங்களூரு : பா.ஜ.,வின் யதுவீர், ஷோபா, சோமண்ணா, காங்கிரசின் மன்சூர் அலிகான் உட்பட, 116 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். கர்நாடகாவில் முதல்கட்ட தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங் களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது.முதற்கட்டமாக தேர்தல் நடக்கும் உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., தெற்கு, பெங்., சென்ட்ரல், சிக்கபல்லாப்பூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது.அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து, வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.வேட்புமனு தாக்கல் செய்ய, இன்று கடைசி நாள் ஆகும். மாண்டியாவில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் குமாரசாமி, பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத், பெங்களூரு தெற்கு பா.ஜ., வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர், இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். யார்? யார்?
மைசூரு பா.ஜ., வேட்பாளர் யதுவீர் நேற்று இரண்டாவது முறையாக, வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ராஜேந்திராவிடம் தாக்கல் செய்தார். அவருடன் மாநில தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,வான ஜி.டி. தேவகவுடா இருந்தனர். பெங்களூரு காவேரி பவனில் தேர்தல் அதிகாரி தயானந்தாவிடம், மத்திய அமைச்சர் ஷோபா வேட்புமனு தாக்கல் செய்தார். பா.ஜ., - எம்.எல்.ஏ.க்கள் கே.ஆர்.புரம் பைரதி பசவராஜ், மஹாலட்சுமி லே - அவுட் கோபாலய்யா, தாசரஹள்ளி முனிராஜ் உடன் இருந்தனர். துமகூரில் தேர்தல் அதிகாரி சுபா கல்யாணிடம், சோமண்ணா வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் எடியுரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, எம்.பி., பசவராஜ், எதிர்க்கட்சி தலைவர் அசோக் உடன் இருந்தனர். சாம்ராஜ்நகரில் தேர்தல் அதிகாரி ஷில்பா நாக்கிடம், பா.ஜ., வேட்பாளர் பால்ராஜ் மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் சார்பில் பெங்களூரு வடக்கில் போட்டியிடும் ராஜிவ் கவுடா, தேர்தல் அதிகாரி தயானந்தாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். மைசூரு காங்., வேட்பாளர் லட்சுமண், சாம்ராஜ்நகர் - தனி வேட்பாளர் சுனில் போஸ் ஆகியோர், வேட்புமனு தாக்கல் செய்த போது, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உடன் இருந்தனர். பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ரகுமான் கான் மகன், மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இவர், நேற்று மதியம் 12:30 மணிக்கு பெங்களூரு சம்பங்கிராம் நகர் ராஜாராம் மோகன் ராய் ரோட்டில் உள்ள, கணபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய, கோவிலில் இருந்து திறந்த வேனில், ஊர்வலமாக புறப்பட்டார். சிவாஜி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் ஹர்ஷத், எம்.எல்.சி., புட்டண்ணா, ஹொய்சாளா நகர் வார்டு முன்னாள் கவுன்சிலர் ஆனந்த்குமார், முன்னாள் அமைச்சர் நாகேஷ், மாநகராட்சி முன்னாள் மேயர் பத்மாவதி உள்ளிட்ட தலைவர்கள் வேனில் சென்றனர்.இத்தொகுதிக்கு உட்பட்ட சர்வக்ஞர் நகர், சி.வி.ராமன் நகர், சிவாஜிநகர், சாந்தி நகர், காந்திநகர், ராஜாஜி நகர், சாம்ராஜ்பேட், மஹாதேவபுரா ஆகிய, எட்டு சட்டசபை தொகுதிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இளைஞர்கள் பைக்கில் ஊர்வலமாக சென்றனர்.தொண்டர்கள் புடைசூழ, கணபதி கோவிலில் இருந்து, மாநகராட்சி அலுவலகம் வரை, ஒரு கிலோ மீட்டர் துாரத்திற்கு, மன்சூர் அலிகான் திறந்த வேனில், ஊர்வலமாக சென்றார். மதியம் 1:10 மணிக்கு தேர்தல் அதிகாரி, ஹரிஷ்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.நேற்று ஒரே நாளில் 116 பேர், வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னாள் முதல்வர் குமாரசாமி, பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
எங்கு வேட்புமனு தாக்கல்
* பெங்களூரு சென்ட்ரல் - பெங்களூரு மாநகராட்சி அலுவலகம்* பெங்களூரு வடக்கு - காவேரி பவன் எனும் கலெக்டர் அலுவலகம்* பெங்களூரு தெற்கு - ஜெயநகர் மாநகராட்சி மண்டல அலுவலகம்* பெங்களூரு ரூரல் - ராம்நகர் கலெக்டர் அலுவலகம்* கோலார் - டமக்காவில் உள்ள கலெக்டர் அலுவலகம்* மைசூரு - மாவட்ட கலெக்டர் அலுவலகம்