புதுடில்லி, விமானங்கள், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் ஐந்து ஆண்டு களுக்கு விமானங்களில் பறக்க தடை விதிக்க பயணியர் விமான பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.சமீபகாலமாக, பல்வேறு விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அல்லது விமான கழிப்பறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எழுதி மர்ம நபர்கள் மிரட்டல் விடுப்பது அதிகரித்து உள்ளன.இதேபோல் சென்னை, வாரணாசி உட்பட நாடு முழுதும் உள்ள 41 விமான நிலையங்களுக்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.இதன் காரணமாக பாதுகாப்பு பரிசோதனைகள் கடுமையாக்கப்படுவதால், பயணியர் நீண்டநேரம் காத்திருந்து பயணிக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே, இத்தகைய போலி வெடிகுண்டு மிரட்டல்களை விடுக்கும் நபர்களை கண்டறியும் பட்சத்தில், அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தருவதுடன், விமானங்களில் ஐந்து ஆண்டுகள் பறக்கவும் தடைவிதிக்க பயணியர் விமான பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.இது தொடர்பான பரிந்துரைகளை, விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அளித்துள்ளதாக அந்த அமைப்பின் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர் தவறு செய்தது உறுதி செய்யப்படும்பட்சத்தில் அந்த நபர் விமானத்தில் பறக்க மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை மட்டுமே தடை விதிக்கப்படுவதுடன், குறிப்பிட்ட விமான நிறுவனத்தில் மட்டுமே பறக்கவும் தடை விதிக்கப்படுகிறது.இதை மாற்றி, அனைத்து விமானங்களிலும் அவர் ஐந்தாண்டுகள் வரை பயணிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவில் 'பிரீமியம் எகானமி'
'டாடா' குழுமத்தின், 'ஏர் - இந்தியா' விமான நிறுவனம், குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில், 'பிரீமியம் எகானமி' வகுப்புகளுக்கான சேவையை அடுத்த மாதம் துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.இதன்படி, புதிதாக மறுசீரமைக்கப்பட்ட ஏ320 நியோ விமான வகைகள் இயக்கப்படும் நகரங்களில், பிரீமியம் எகானமி வசதிகளை பயணியர் பெற முடியும். இந்த வகை விமானங்களில் பிசினஸ் வகுப்புகளுக்கு எட்டு இருக்கைகளும், பிரீமியம் எகானமி வகுப்பில் 24 இருக்கைகளும், எகானமி வகுப்புகளுக்கு 132 இருக்கைகளும் ஒதுக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து விமானங்களிலும் மூன்று வகையான இருக்கை வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏர் இந்தியா நிறுவனம் உறுதி அளித்துள்ளது.