உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொரோனா மரண ஆய்வறிக்கை மிகை மதிப்பீடு என அரசு விளக்கம்

கொரோனா மரண ஆய்வறிக்கை மிகை மதிப்பீடு என அரசு விளக்கம்

புதுடில்லி : 'கொரோனா தொற்று பரவலின் போது இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலையின் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் தவறான மிகை மதிப்பீடு' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று பரவல் ஏற்பட்ட 2020ல், இந்தியாவின் உயிரிழப்பு விகிதங்கள் குறித்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலையில் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இது அமெரிக்காவைச் சேர்ந்த, 'சயின்ஸ் அட்வான்சஸ்' என்ற கல்வி இதழில் வெளியாகி உள்ளது.அதில், 'கொரோனா தொற்று பரவிய 2020ல், இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் முந்தைய ஆண்டை விட 12 லட்சம் அதிகம் இருந்தது.'இது, இந்திய அரசு வெளியிட்ட கொரோனா மரணங்களை விட எட்டு மடங்கு அதிகம். உலக சுகாதார நிறுவனத்தின் மதிப்பீடை விட 1.5 மடங்கு அதிகம்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஆய்வு முடிவுகளாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2019ம் ஆண்டை விட 2020ல் 4.74 லட்சம் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட்டன.இதே போல, 2018 மற்றும் 2019லும், முந்தைய ஆண்டுகளை காட்டிலும் உயிரிழப்புகள், முறையே 4.86 லட்சம் மற்றும் 6.90 லட்சமாக அதிகரித்தன. மேலும், உயிரிழப்புகள் பல்வேறு காரணங்களால் அதிகரிக்கின்றன. அதற்கு கொரோனா தொற்று மட்டுமே காரணம் அல்ல; இறப்பு சான்று பதிவுகள் அதிகரிப்பதும் ஒரு காரணம்.எனவே, ஆக்ஸ்போர்டு பல்கலையின் ஆய்வு முடிவுகள் தவறான மிகை மதிப்பீடாக உள்ளது என்று, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்