| ADDED : மார் 05, 2025 11:15 PM
மாண்டியா: பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாளில், இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தார்.மாண்டியா மாவட்டம், கே.ஆர்., பேட் டவுனை சேர்ந்தவர் மஞ்சுநாத். மாநகராட்சி கவுன்சிலர். இவரது மகன் சஷாங்க், 28. மென்பொறியாளரான இவர், பெங்களூரில் பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஸ்னா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது. தன் காதலை பெற்றோரிடம், சஷாங்க் தெரிவித்தார். இரு வீட்டு குடும்பத்தினரும் பேசி, திருமணத்துக்கு நாள் குறித்தனர்.இருவருக்கும் கடந்த 2ம் தேதி, மைசூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் விமரிசையாக திருமணம் நடந்தது. திருமண நாளன்று, சஷாங்க் மிகவும் சோர்வுடன் இருந்தார். திருமண வைபவத்தால் சோர்வடைந்திருக்கலாம் என்று பெற்றோர் நினைத்தனர்.ஆனால், சிறிது நேரத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதை பெற்றோரிடம் கூறாமல், தன் நண்பர்களிடம் கூறியுள்ளார். அவர்களும், திருமண நிகழ்வுகளால் சோர்வாக இருக்கலாம் என்றனர்.திருமணம் முடிந்து, 4ம் தேதி பெங்களூருக்கு பெற்றோர், மனைவியுடன் சஷாங்க் வந்தார். வந்த சிறிது நேரத்தில் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர், சஷாங்க் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்ட பெற்றோரும், மனைவியும் கதறி அழுதனர். திருமணமான மூன்று நாளிலேயே காதல் கணவர் இறந்ததை எண்ணி, அஸ்னா கதறியது, அனைவரையும் கலங்கடித்தது.