ஹாசன்: லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரும், ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜண்ணா, இதுவரை ஹாசனுக்கு வருகை தரவில்லை. இதனால் அவர் மீது, ஹாசன் எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர்.லோக்சபா தேர்தலை ஒட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால், கர்நாடகாவில் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று, மக்கள் பிரச்னை தொடர்பாக கூட்டங்களை அமைச்சர்களும் நடத்தவில்லை.லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர், தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று, அங்கு நிலவும் பிரச்னை குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் கூட்டுறவு அமைச்சரும், ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ராஜண்ணா இதுவரை, அங்கு செல்லவில்லை. இம்மாவட்டத்திலுள்ள, எட்டு தாலுகாக்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக அரசு அறிவித்தது.விவசாயிகளுக்கு அரசு அறிவித்த 2,000 ரூபாய் இழப்பீடு ஹாசன் மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அமைச்சரிடம் முறையிட, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.ஹாசனுக்கு வராத ராஜண்ணா மீது, எம்.எல்.ஏ.,க்களும் அதிருப்தியில் உள்ளனர்.“வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள அரசிடம் இருந்து போதிய நிதி கிடைப்பதில்லை. மாவட்ட பொறுப்பு அமைச்சர் கூட்டம் நடத்தினால், அவரிடம் நிதி கேட்டு முறையிடலாம் என்று நினைத்தால், அவர் ஹாசன் பக்கமே வர மறுக்கிறார்,” என, அரக்கலகூடு ம.ஜ.த.-, - எம்.எல்.ஏ., மஞ்சு அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.“ராஜண்ணா, துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரை ஹாசன் மாவட்ட பொறுப்பு அமைச்சராக சித்தராமையா நியமித்தார். அப்போதே ராஜண்ணா அதிருப்தி தெரிவித்தார். எனக்கும், ஹாசனுக்கும் என்ன சம்பந்தம்?” என, அவர் பகிரங்கமாகவே கேட்டார்.ஹாசன் மீது அக்கறை இல்லாத ராஜண்ணாவை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக வேறு ஒருவரை பொறுப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவலுத்துள்ளது.