மேலும் செய்திகள்
மேட்டூர் அணை நீர்வரத்து 19,199 கன அடியாக உயர்வு
02-Sep-2024
பெங்களூரு : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 19,065 கன நீர் சென்று கொண்டுள்ளது.கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, எதிர்பார்த்ததை விட, அதிகமாக பெய்தது. இதனால், பெரும்பாலான அணைகள் நிரம்பின. அதன்பின், மழை சற்று ஓய்ந்தது. தற்போது மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகமாக உள்ளது.இந்த வகையில், மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., தண்ணீர் ஆகும். இதில், நேற்றைய நிலவரப்படி, 48.87 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு இருந்தது.வினாடிக்கு 11,248 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது; வினாடிக்கு, 10,715 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதுபோன்று, மைசூரின் கபினி அணையின் மொத்த கொள்ளளவு, 19.52 டி.எம்.சி., தண்ணீர் ஆகும். இதில், நேற்றைய நிலவரப்படி, 19.28 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது.வினாடிக்கு, 8,025 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது; வினாடிக்கு, 8,350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.இரண்டு அணைகளில் இருந்தும், வினாடிக்கு, 19,065 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நீர் தமிழகத்துக்கு சென்றது.இன்று மாலை, தமிழகத்தின் பிலிகுண்டுலு பகுதிக்கு சென்றடையும். கடந்த வாரம், மிக குறைந்த அளவு மட்டுமே பதிவாகி இருந்தது.இதுபோன்று, காவிரி நீர் பிடிப்பு பகுதிகளின், ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அம்மாநிலங்களை ஒட்டியுள்ள, கர்நாடகாவின் ராய்ச்சூர், யாத்கிர், பீதர், கலபுரகி, விஜயபுரா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
02-Sep-2024