திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முன்தினம் இரவில் இருந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவ தால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன, ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. 'ஆரஞ்ச் அலெர்ட்'
திருச்சூர் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. கோழிக்கோடு மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கு நேற்று கன மழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடப்பட்டது.நேற்று காலை நிலவரப்படி மூணாறில் 16.1 செ.மீ., மழை பெய்தது. இங்குள்ள காலனியில் மண் சரிவு ஏற்பட்டு பெண் ஒருவர் பலியானார். நேற்று முன் தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல வீடுகள் சேதமடைந்து உள்ளன. கொல்லம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஓச்சிரா பரபிரம்மா கோவிலில் உள்ள அன்னதான மண்டபத்தின் ஒரு பகுதி தொடர் மழைக்கு இடிந்து விழுந்தது.கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலங்கரா, பம்பலா மற்றும் கல்லார்குட்டி அணைகளின் கதவு கள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. பெரியாறு ஆற்றின் கரைகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.மலங்கரா அணை கதவு 1 மீட்டர் உயரம் திறக்கப்பட்டுள்ளதால், எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் மூவாட்டுப்புழா மற்றும் தொடுபுழா ஆறுகளின் கரைகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை காரணமாக கோட்டயம் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. நிலச்சரிவு
அடுத்த 24 மணி நேரத்திற்கு கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசுவதோடு, மிதமானது முதல் கனமழை வரை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பகுதி களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நீர் நிலைகளில் சுற்றுலா பொழுதுபோக்கு அம்சங்களான படகு சவாரி உள்ளிட்டவற்றுக்கும், டிரக்கிங் செல்வதற்கும் மறு உத்தரவு வரும் வரை தடை விதித்து கலெக்டர் ஷீபா ஜார்ஜ் நேற்று உத்தரவிட்டார்.