மூணாறு : கேரளாவில் ஜூன் 7 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நேற்று ' எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 30ல் துவங்கியது.அதன் பிறகு திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா, இடுக்கி உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஜூன் 2 வரை பலத்த மழை பெய்ததால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்த நிலையில் ஜூன் 7 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் பல்வேறு மாவட்டங்களுக்கு 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்தது.நேற்று இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டது.இன்று எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கும்,நாளை (ஜூன் 5) மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், ஜூன் 6ல் இடுக்கி, எர்ணாகுளம் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கும், ஜூன் 7ல் ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும் எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இடுக்கி மாவட்டத்தில் ஜூன் ஒன்று, இரண்டு ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தது. மாவட்டத்திற்கு நேற்று எல்லோ அலர்ட் விடுக்கப்பட்ட போதும் அதற்கு ஏற்ப மழை பெய்யவில்லை.மூணாறில் நேற்று முன்தினம் சிறிது மழை பெய்த போதும் நேற்று மாலை 6:00 மணி வரை மரை பெய்யவில்லை. மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டது.