உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இயற்கை ஆர்வலர்கள், சாகச விரும்பிகளின் கனவை நிறைவேற்றும் ஹொன்னேமரடு

இயற்கை ஆர்வலர்கள், சாகச விரும்பிகளின் கனவை நிறைவேற்றும் ஹொன்னேமரடு

ஷிவமொகா மாவட்டம் சாகரின் ஹொன்னேமரடுவில் லிங்கமக்கி அணை அமைந்து உள்ளது. வார இறுதி நாட்களை உற்சாகத்துடன் செவழிக்க ஏற்ற இடம்.மலைக்கு மத்தியில், ஷராவதி ஆற்றின் உப்பங்கழிகள் மற்றும் மலையேற்றம், கேனோயிங், காயாக்கிங் ஆகிய நீர்சாகச விளையாட்டுகளும் உள்ளன. இந்த ஏரியின் நடுவில் உள்ள சிறிய தீவில் நீங்கள் முகாமிட்டும் தங்கலாம்.இயற்கை ஆர்வலர்கள், புகைப்பட கலைஞர்கள் மத்தியில் இவ்விடம் பிரபலமானது. ஹொன்னமரடு என்ற பெயர், உள்ளூர் மரமான ஹொன்னே என்பதில் இருந்து வந்தது.சூரிய உதயமும், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை இந்த ஆற்றில் கரையில் நின்று பார்க்கும் போது, 'தங்க ஆறு' போன்று காட்சி அளிக்கும்.இங்கு புகை பிடிப்பது, மது அருந்துவது, ரசாயன அடிப்படையிலான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இங்கு மொபைல் போன் நெட் ஒர்க் கிடைக்காது என்றாலும், இதன் அழகை பார்க்கும் நீங்கள், மொபைல் போன் தேவையில்லை என்று முடிவுக்கு வருவீர்கள்.உங்களுக்கு நீச்சல் தெரியாவிட்டாலும், உயிர் காக்கும் கவசம் அளிக்கின்றனர். இதை பயன்படுத்தி கேனோயிங், காயாக்கிங் செல்லலாம்; நீச்சல் கூட அடிக்கலாம். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இப்பகுதிக்கு சென்றால், வானத்தில் மிதப்பதுபோன்று உணருவீர்கள்.அதன்பின், இரண்டாம் நாள், அங்கிருந்து 4 கி.மீ., துாரம் நெளிவுகள் நிறைந்த பாதைகள் விழியாக குறுகிய, எளிதான பாறையில் மலையேறலாம். முதன்முறையாக மலையேறுபவர்களுக்கு இது புதிய அனுபவத்தை அளிக்கும்.பீமன ஹெஜ்ஜே (பீமனின் கால் தடங்கள்) மலை உச்சியில் உள்ளது. பீமன் அந்த இடத்துக்கு சென்றதால், அவரது கால்தடங்கள் பதிந்ததாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.இந்த உப்பங்கழிக்கு வர ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை ஏற்ற நேரம். மற்ற மாதங்களில் சற்று வெயிலின் தாக்கம் கூடுதலாக இருக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இடம் என்பதால், உணவுக்கான தட்டுகள், குளித்த பின் மாற்றிக்கொள்ள கூடுதல் ஆடைகள், மருந்துகள், கொசு விரட்டிகள் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்பவர்கள், ஷிவமொகா விமான நிலையத்திற்கு சென்றடைய வேண்டும். அங்கிருந்து டாக்சியில் செல்லலாம்.ரயிலில் செல்பவர்கள், ஷிவமொகாவின் தலகுப்பா ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து உள்ளூர் ஜீப்கள், ஆட்டோக்களில் செல்லலாம். பஸ்சில் செல்பவர்களுக்கு, ஹொன்னேமரடுவுக்கு நேரடியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ