பாகல்கோட்: ''என்னை காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர், அறிவற்றவர் என, விமர்சித்துள்ளார். இவரை விட அதிகமாக என்னாலும் பேச முடியும்,'' என, பா.ஜ.,வின் முன்னாள் எம்.எல்.ஏ., தொட்டனகவுடா பாட்டீல் எச்சரித்தார்.பாகல்கோட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி:அரசியல் சாசனம், ஜனநாயகம் குறித்து, காங்கிரசார் அதிகம் பேசுகின்றனர். ஆனால் அரசியல் சாசனத்தை படுகொலை செய்ததே, காங்கிரஸ் தான்.ஹுன்குந்த் காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர், வாயை திறந்தால் தைரியம், வீரம் என பேசுகிறார். ஆனால் அவர், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கோழையை போன்று என்னை விவேகமற்றவர் என, விமர்சிக்கிறார். என்னாலும் அவரை விட அதிகமாக பேச முடியும்.தைரியம் உள்ளவர், வீரன் இப்படி பேசுவாரா? கோழைகள் தான் இது போன்று பேசுவர். விஜயானந்த் காசப்பனவர் வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது.மரியாதை கொடுத்தால், மரியாதை கொடுப்பேன்; இல்லையென்றால் அவரை விட, மோசமான வார்த்தைகளை பயன்படுத்த, எனக்கும் தெரியும்.கடந்த 20 ஆண்டுகளாக, ஹுன்குந்த் தொகுதியில் அனைவருடனும் சகோதரத்துவத்துடன் இருக்கிறேன். என்னை பற்றி தவறான வார்த்தைகளை பயன்படுத்தினால், மவுனமாக இருக்கமாட்டேன். ஏனென்றால் நான் கவுடா.இவ்வாறு அவர் கூறினார்.