| ADDED : ஜூலை 03, 2024 02:27 AM
பார்படாஸ்: பார்படாசில் புயல், மழையில் இருந்து தப்பிய இந்திய அணி வீரர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்.வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி, சாம்பியன் ஆனது. இங்குள்ள பார்படாஸ் தீவில் உள்ள 'ஹில்டன்' ஓட்டலில் தங்கி இருந்தனர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர், தனி விமானத்தில் இந்தியா வர திட்டமிட்டனர்.ஆனால் திடீரென ஏற்பட்ட 'பெரில்' புயல் காரணமாக, பார்படாசின் கிரான்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.நேற்று ஓட்டலின் அருகே புயல் கரையை கடந்த நிலையில், வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் இருந்து பார்படாஸ் தற்போது மீண்டு வருகிறது. விமான நிலையத்தை திறக்க, போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று விமான நிலையம் இயங்கத் துவங்கின.இதனிடையே 600 மைல் தொலைவில் இருந்து மற்றொரு புயல், கிழக்கு பார்படாஸ் நோக்கி வருவதால் மீண்டும் பலத்த மழை, புயல் காற்று காத்திருக்கிறது. இதனால், இந்திய வீரர்கள், இன்று அதிகாலை பார்படாசில் இருந்து கிளம்ப திட்டமிட்டுள்ளனர். இன்று இரவு 7:45 மணிக்கு டில்லி வந்தடைவர். பின் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளனர்.