உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அசுரனை அழிக்க ஆயுதம் வழங்கிய ஆனேகுட்டே விநாயகர்

அசுரனை அழிக்க ஆயுதம் வழங்கிய ஆனேகுட்டே விநாயகர்

முழு முதற்கடவுள் விநாயகனை வழிபட்டால், செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். விநாயகர் சதுர்த்தியை நாடு முழுதும் பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவர்.அசுரனை அழிக்க பீமனுக்கு உதவிய விநாயகருக்கு கர்நாடகாவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. அது பற்றி பார்க்கலாம்.

கடும் வறட்சி

உடுப்பி, குந்தாபூர் தாலுகா கும்பாசி கிராமத்தில் உள்ளது ஆனேகுட்டே விநாயகர் கோவில். பல ஆண்டுகளுக்கு முன்பு கும்பாசி கிராமத்தில் கடும் வறட்சி நிலவியது. மழை பெய்ய வேண்டிய முனிவர்கள் தவம் இருந்தனர். முனிவர்களின் தவத்தை கும்பா என்ற அசுரன் தடுக்க முயன்றான். அசுரனை அழிக்கும்படி, விநாயகரிடம் முனிவர்கள் வேண்டினர்.அசுரனை அழிக்கும் சக்தி, பாண்டவர்களில் ஒருவரான பீமனுக்கு இருந்தது. பீமன் மூலம், அசுரனை அழிக்க விநாயகர் முடிவு செய்தார். இதனால் விநாயகர், யானை வடிவில் தோன்றி, ஒரு ஆயுதத்துடன், வனவாசத்தில் இருந்த பீமனை நோக்கிச் சென்றார். பீமனின் அருகில் ஆயுதத்தை போட்டுவிட்டு, யானை வடிவில் வந்த விநாயகர் மறைந்தார். அந்த ஆயுதத்தை பயன்படுத்தி அசுரனை வதம் செய்தார் பீமன். இதையடுத்து வறட்சி நீங்கி மழை பெய்தது.

12 அடி உயரம்

இதனால், ஆனை மலையில் விநாயகருக்கு முனிவர்கள் கோவில் கட்டினர். இப்போது அந்த கோவிலில் 12 அடி உயர விநாயகர், நாமம் அணிந்தபடி, விஷ்ணு ரூபத்தில் இருக்கிறார். தினமும் விநாயகருக்கு பூஜையின்போது வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது.வெள்ளிக் கிழமைகளில் உலக நன்மைக்காக கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சங்கடஹர சதுர்த்தி அன்று பக்தர்கள் துலாபார காணிக்கை செலுத்துகின்றனர். திருமணத்தடை நீங்கவும், வியாபாரத்தில் லாபம் பெருகவும் கணபதி ஹோமம் நடத்தப்படுகிறது.தினமும் காலை 5:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.இந்த கோவில் பெங்களூரில் இருந்து 400 கி.மீ., துாரத்தில் உள்ளது. ரயில், பஸ் வசதியும் உள்ளது--- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை