தங்கவயல்: ''தமிழர்கள் நிறைந்த தங்கவயலில் கன்னட ஜோதியை வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்று தங்கவயல் தாசில்தார் நாகவேணி பேசினார்.மைசூரு ராஜ்யமாக இருந்தது, 1973ல் 'கர்நாடகா' என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதை, கர்நாடக அரசு, ஓராண்டு முழுதும் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக 'கன்னட ஜோதி' யாத்திரை கோலார் மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களுக்கும் கொண்டு வரப்பட்டது.சிக்கபல்லாப்பூர், சிந்தாமணியில் இருந்து கோலார், சீனிவாசப்பூர் சதுக்கத்திற்கு, ஜூலை 30ம் தேதி வந்த யாத்திரையை, தாசில்தார் சுதீந்திரா மலர் துாவி வரவேற்றார். மறுநாள் 31ம் தேதி, முல்பாகலின் மடியனுாரில், தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சம்ருத்தி மஞ்சுநாத் யாத்திரையை வரவேற்றார். இந்த யாத்திரை நேற்று தங்கவயலுக்கு வந்தது. தங்கவயல் தாசில்தார் நாகவேணி மலர் துாவி வரவேற்றார். அவர் பேசுகையில், ''தங்கவயலில் பெரும்பாலும் வாழும் தமிழர்கள் விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ''தங்கவயல் மக்கள், கர்நாடகாவுக்கு விஸ்வாசம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க ஒருங்கிணைந்துள்ளனர்,'' என்றார்.தாலுகா பஞ்சாயத்து தலைமை அதிகாரி மஞ்சுநாத் ஆர்த்தி, வட்டார கல்வி அதிகாரி முனி வெங்கட ராமாச்சாரி, ராபர்ட்சன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், கன்னட மித்ரரு சங்க சேகரப்பா, கன்னட சங்க ராமகிருஷ்ணா, ராதா, அரசு ஊழியர்கள் சங்க தலைவர் நரசிம்ம மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.பல்வேறு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மஞ்சள், சிகப்பு வண்ண கொடிகளுடன் பங்கேற்றனர். பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க அம்பேத்கர் சாலை, பிரிட்சர்ட் சாலை, கீதா சாலை வழியாக கர்நாடக ஜோதி யாத்திரை சென்றது. தொடர்ந்து, பங்கார்பேட்டை, மாலுார், கோலார் வழியாக பெங்களூரு ரூரல் மாவட்டத்திற்கு செல்கிறது.