உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  கெஜ்ரிவால் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுகிறார் குற்றச்சாட்டு!

 கெஜ்ரிவால் அதிகமாக ஸ்வீட் சாப்பிடுகிறார் குற்றச்சாட்டு!

புதுடில்லி 'டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிறையில் மாம்பழங்கள், இனிப்புகள் சாப்பிடுவதால், அவரது சர்க்கரை அளவு உயர்கிறது. இதை காரணம் காட்டி ஜாமின் பெற அவர் முயற்சிக்கிறார்' என, சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நேற்று முறையிட்டது.டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் கடந்த 10ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு இடைக்கால நிவாரணம் அளிக்க மறுத்துவிட்டது.

தள்ளுபடி

இந்நிலையில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில், புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ரத்த சர்க்கரை அளவு அபாயகரமான அளவுக்கு உயர்ந்துள்ளது. எனவே, அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் டாக்டரிடம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை பெற அனுமதி அளிக்க வேண்டும்' என, கோரப்பட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதி காவேரி பவேஜா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன் வாதிட்டதாவது:அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் என்னென்ன உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன என்பதை சிறை நிர்வாகத்திடம் கேட்டு பெற்றோம். கடந்த 1ம் தேதி அவருக்கு வீட்டு உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்கையில் ரத்த சர்க்கரை அளவு அபாயகரமாக உயர்ந்துள்ளதாக அவர் மனுவில் கூறியிருக்கிறார். சர்க்கரை அளவு கூட வேண்டும் என்பதற்காகவே, சிறையில் மாம்பழம் மற்றும் இனிப்புகளை சாப்பிடுகிறார். சர்க்கரை போட்டு டீ அருந்துகிறார். சர்க்கரை அளவை காரணம் காட்டி ஜாமின் பெற அவர் முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் வாதிட்டார்.அப்போது குறுக்கிட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் விவேக் ஜெயின், ''பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்துள்ள செய்தியாளர்களுக்காக ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்கிறார்.''இந்த விவகாரத்தில் மேலும் சிறப்பான மனுவை தாக்கல் செய்வதற்காக தற்போதுள்ள மனுவை திரும்ப பெற்றுக் கொள்கிறோம்,'' என்றார்.இதை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவரது மருத்துவ அறிக்கை மற்றும் அவருக்கு வழங்கப்படும் உணவு அட்டவணையை இன்று தாக்கல் செய்யும்படி, திஹார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

கொல்ல சதி

இந்நிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி அமைச்சர் ஆதிஷி நேற்று கூறியதாவது:அமலாக்கத் துறை வாயிலாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை யைக் கெடுக்க பா.ஜ., முயற்சித்து வருகிறது. அவருக்கு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்படுவதை நிறுத்த முயற்சி நடந்து வருகிறது.இதன் வாயிலாக கெஜ்ரிவாலை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. கடவுளுக்கு கூட பயப்படாமல் அமலாக்கத்துறை இவ்வளவு பொய்களை கூறி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர அரசியலில் சுனிதா

-- நமது டில்லி நிருபர் - கெஜ்ரிவால் கைதுக்கு பின், அவரது மனைவி சுனிதா, சிறிது சிறிதாக அரசியலுக்குள் அடி எடுத்து வருகிறார். கெஜ்ரிவால் கைதை கண்டித்து, சமீபத்தில், 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் டில்லியில் நடத்திய கண்டன கூட்டத்தில் சுனிதாவும் பங்கேற்றார். சில தினங்களுக்கு முன், குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்வோர் பட்டியலை, ஆம் ஆத்மி தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சுனிதாவின் பெயரும் இடம்பெற்று இருந்தது.இந்நிலையில்தான், வரும் 21ல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இண்டியா கூட்டணியின் சார்பில் பிரமாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆம் ஆத்மி சார்பில், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான் மற்றும் அக்கட்சியின் மூத்த எம்.பி., சஞ்சய்சிங் ஆகியோர் பங்கேற்பதாக முதலில் கூறப்பட்டு இருந்தது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு, சுனிதா கெஜ்ரிவாலும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த கூட்டம், அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நடந்தது. ஆனால், ராஞ்சியில் நடைபெறப்போவது இண்டியா கூட்டணியின் அரசியல் தலைவர்கள் பங்கேற்கப்போகும் முக்கியமான தேர்தல் பிரசார கூட்டம். இதில், முதன்முறையாக பங்கேற்பதன் வாயிலாக, தீவிர அரசியலுக்குள் சுனிதா நுழைந்துள்ளார் என, டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Indhuindian
ஏப் 19, 2024 06:07

நம்ம வூர்ல ஒருத்தரு பீப் கிடைக்கல்லேன்னு பொலம்பலையா அந்த மாதிரி இவரை எனக்கு ரேஷ்மலாய் கிடைக்கல்லே பாதாம் அல்வா கிடைக்கலேன்னு புலம்பவிடாதீங்க ஆருக்கு என்ன புடிக்குதோ அதை உள்ளே தள்ளட்டும் இருக்கவே இருக்கு மதிய அரசு வாங்க பேர்ல பஷிய போட்டுட்டா போச்சு


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை