உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் சிறை சென்றார் கெஜ்ரிவால்: ஜாமின் அனுபவம் மறக்க முடியாதது என பேச்சு

மீண்டும் சிறை சென்றார் கெஜ்ரிவால்: ஜாமின் அனுபவம் மறக்க முடியாதது என பேச்சு

புதுடில்லி : மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் முடிவடைந்ததை அடுத்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று திஹார் சிறையில் சரணடைந்தார்.டில்லி அரசின் மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய பண மோசடி வழக்கில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கி, கடந்த மே 10ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே சமயம், ஜூன் 2ம் தேதி, சிறையில் மீண்டும் சரண் அடையும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அறிவுறுத்தல்

மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால், இந்த இடைக்கால ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கும்படி, அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தியது. இதன்படி அவர், பண மோசடி குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது, நாளை மறுநாள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.இந்நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் முடிவடைந்ததை அடுத்து, திஹார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார். முன்னதாக, ராஜ்காட்டில் உள்ள மஹாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கன்னாட் பிளேசில் உள்ள ஹனுமன் கோவிலில் அவர் தரிசனம் செய்தார்.சரணடைவதற்கு முன், டில்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடம் முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது:ஊழலில் ஈடுபட்டதற்காக அல்ல; சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்பியதற்காக நான் மீண்டும் சிறைக்கு செல்கிறேன். உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமினை நன்றாக பயன்படுத்தி, நாட்டை காப்பாற்றுவதற்காக பிரசாரம் செய்துள்ளேன். இந்த அனுபவத்தை மறக்க முடியாது. ஜாமின் காலத்தில் ஒரு நிமிடத்தை கூட வீணடிக்கவில்லை. எனக்கு நாடு தான் முக்கியம். அதன் பின் தான், ஆம் ஆத்மி.

போராட்டம்

பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் என, பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பொய்யான தகவல்களை அளித்துள்ளன. இதனால் ஒன்றுமே நடக்கப் போவதுமில்லை. மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கப் போவதும் இல்லை. ஓட்டு எண்ணிக்கையின் போது, துவக்கத்தில் நாம் பின்தங்கியிருந்தாலும், ஓட்டு எண்ணும் இடத்திலிருந்து முகவர்கள் உடனடியாக வெளியேறி விடக் கூடாது. ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும். 'இண்டியா' கூட்டணி கட்சியினர் இதில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.காந்தி நினைவிடத்துக்கு கெஜ்ரிவால் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அங்கு டில்லி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kuppan
ஜூன் 03, 2024 17:37

இது என்ன போருக்கு போவது போல் வாழ்த்து வேறுவது, போறது சிறைக்கு, ஊழல் செய்து சிறையில் இருக்கும் சிறை பறவை பரோலில் வந்து மீண்டும் சிறைக்கு செல்கிறார், அவர் பெற்றோர் அடித்து உதைத்து அனுப்ப வேண்டும் நல்ல அப்பவாவ இருந்தா.


Swaminathan L
ஜூன் 03, 2024 15:43

பாராளுமன்றத் தேர்தல் வரை அவரை விசாரணைக்கு உட்படுத்திக் கைது செய்யாமல் அமலாக்கத்துறை காலங் கடத்தியதாக உச்சநீதிமன்றம் கருதியதால் தான் இவருக்கு இடைக்கால ஜாமீன் தரப்பட்டது. பிரச்சாரங்கள் முடியும்வரை காத்திருந்து பின் உடல் எடை குலைவு, உள்ளுறுப்புகள் நாசம், அனைத்து உறுப்புகளுக்கும் அவசர மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சை அவசியம், சிறையில் கொலை சாத்தியம் என்றெல்லாம் அடுக்கிவிட்டு சட்டரீதியாக செய்த முயற்சிகள் வீணாகி மறுபடியும் சிறைக்குப் போயிருக்கிறார்.


venkatakrishna
ஜூன் 03, 2024 05:32

மிசா கைதிகள் போல்,இதை காலியாக கைதிகள் என்று கொள்ளலாமா?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ