நிலச்சரிவு நிவாரண நிதி பிரதமர் மோடி ஒப்புதல்
உத்தர கன்னடா : சிரூர் நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்குவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.கன மழை காரணமாக, உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகா, சிரூர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த ஜூலை 16ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு, 12 பேர் உயிரிழந்தனர். இதில், ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கும்படி, உத்தர கன்னடா பா.ஜ., - எம்.பி., விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, ஜூலை 31ம் தேதி, லோக்சபாவில் வலியுறுத்தினார்.பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனியாக கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் பிரதமர், தேசிய இயற்கை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்து, எம்.பி.,க்கு பிரதமர் பதில் கடிதம் எழுதியுள்ளார்.நிலச்சரிவு பகுதியை சீரமைக்க தேவையான அனைத்து விதமான உதவிகளையும், மத்திய அரசு செய்யும் என்று மோடி உறுதி அளித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.அடுத்தகட்டமாக, உத்தர கன்னடா கலெக்டர் லட்சுமி பிரியா, சிரூர் நிலச்சரிவு தொடர்பாக அறிக்கை தயாரித்து, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் அடிப்படையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, பிரதமர் நிவாரண நிதி வழங்கப்படும்.