தட்சிண கன்னடா: கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற மனைவி உட்பட ஐந்து பேருக்கு, மங்களூரு நீதிமன்றம், 'ஆயுள்' தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பாவூர் தெண்டிஞ்சே பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில், 59. இவரது இரண்டாவது மனைவி நெபிசா, 40. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இஸ்மாயில், டிராவல்ஸ் நடத்தி வந்தார்.நெபிசாவுக்கு, ஜமால் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை கணவர் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த நெபிசா, கணவரை கொல்ல, கள்ளக்காதலன் ஜமாலுடன் திட்டமிட்டார். கணவரை கொல்ல, 2.50 லட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்தார்.கடந்த 2016 பிப்ரவரி 16ம் தேதி, பெங்களூரு செல்ல வேண்டும் என்று நான்கு பேர், இஸ்மாயிலிடம் வாடகைக்கு கார் கேட்டனர். அவரும், தானே காரை ஓட்டி வருவதாக அவர்களுடன் சென்றார். செல்லும் வழியில் வாகனம் பழுதடைந்தது. இதனால், வாகனத்தை பழுது செய்யும் கடையில் விட்டுவிட்டு, லாட்ஜில் தங்கினர்.இரவில் இஸ்மாயிலை, கத்தியால் குத்தி கொன்று, அவரது சடலத்தை, வனப் பகுதியில் வீசிவிட்டு சென்றனர். இஸ்மாயிலின் ரத்தக்கறை படிந்த ஆடைகள், மொபைல் போன்களை உல்லால் நேத்ராவதி ஆற்றில் வீசினர்.தன் கணவரை காணவில்லை என்று பிப்., 17ம் தேதி கொனஜே போலீசில் நெபிசா புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், இஸ்மாயில் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இஸ்மாயிலின் முதல் மனைவியின் மகன், தந்தையின் கொலையில் சந்தேகம் எழுப்பினார். இதையடுத்து, நெபசாவின் நடவடிக்கையை போலீசார் கண்காணித்தனர்.தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதை ஒப்புக் கொண்டார். அத்துடன், குற்றவாளிகளுக்கு 2.50 லட்சம் ரூபாய் கொடுப்பதற்காக, தன் தங்க நகைகளை அடமானம் வைத்ததையும், ஒப்பு கொண்டார்.இதையடுத்து, நெபிசா, ஜமால், 38, அப்துல் முனாப் யானே, 41, உல்லாலைச் சேர்ந்த அப்துல் ரகுமான், 36, ஷபீர் யானே ஷபி, 31 ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு, மங்களூரில் உள்ள ஆறாவது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நீதிபதி அளித்த தீர்ப்பு:ஐந்து பேரின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்து பேருக்கும் ஐ.பி.சி., 302ன் கீழ், ஆயுள் தண்டனை, 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்தவில்லை என்றால், கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.ஐ.பி.சி., 201ன் கீழ், ஏழு ஆண்டுகள் தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.ஐ.பி.சி., 120ன் கீழ், ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நஷ்டஈடு வழங்க மாவட்ட சட்ட சேவை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.