| ADDED : மே 03, 2024 11:29 PM
சாம்ராஜ் நகர் : ஓட்டுச்சாவடியை சூறையாடிய வழக்கில் கிராமத்தினர் தலைமறைவானதால், உணவு, தண்ணீர் இன்றி, கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன.கர்நாடகாவில் முதல்கட்டமாக சாம்ராஜ் நகர் உட்பட 14 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்., 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்யாததைக் கண்டித்து, சாம்ராஜ்நகர் தொகுதியின் மலைமஹாதேஸ்வரா மலை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட இன்டிகநத்தா கிராமத்தினர், ஓட்டுப்பதிவை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.அவர்களை தேர்தல் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயன்றபோது, தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த கிராமத்தினர், ஓட்டுச்சாவடியை சூறையாடினர். இந்த சம்பவம் தொடர்பாக, 15 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.போலீஸ் நடவடிக்கையால் அச்சமடைந்த கிராமத்தினர், தலைமறைவாகினர். இதற்கிடையில் ஏப்., 29ம் தேதி மறுஓட்டுப்பதிவும் நடந்தது.கிராமத்தினர் தலைமறைவானதால், அவர்கள் வளர்த்து வந்த கால்நடைகளுக்கு தண்ணீர், உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த முருகேஷ் என்பவரின் ஒரு பசு மாடு, இரண்டு எருமை மாடுகள் உயிரிழந்தன.மாடுகள் கட்டப்பட்ட இடத்திலேயே தீவனம், தண்ணீர் இன்றி அவை இறந்ததாக கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் கூறினர். முருகேஷும் தலைமறைவாக உள்ளார்.இதுபோன்று கிராமத்தில் பெரும்பாலான கால்நடைகள் தீவனம், உணவின்றி தவித்து வருவதாக, அங்கு எஞ்சியிருக்கும் சிலர் தெரிவித்தனர்.