| ADDED : மே 29, 2024 04:57 AM
தாவணகெரே, : சென்னகிரி போலீஸ் நிலையம் சூறையாடப்பட்ட வழக்கில், கைதுக்கு பயந்து சிலர் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் தப்பி ஓடி உள்ளனர்.தாவணகெரேயின் சென்னகிரி திப்புநகரில் வசித்தவர் ஆதில், 32. சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த 24ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடல்நலக்குறைவால் இறந்தார். போலீசார் அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிலின் உறவினர்கள் சிலர், சென்னகிரி போலீஸ் நிலையத்தின் மீது கல்வீசியதுடன், உள்ளே புகுந்து பொருட்களை உடைத்து சூறையாடினார்.இரண்டு போலீஸ் ஜீப்புகளை கவிழ்த்துவிட்டு சேதப்படுத்தினர். நான்கு வழக்குகள் பதிவு செய்த, சென்னகிரி போலீசார் இதுவரை 39 பேரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடிவருகின்றனர்.இந்நிலையில் கைது நடவடிக்கைக்கு பயந்து, சென்னகிரி அருகே ஹொன்னேபாகி கிராமத்தில் வசிக்கும், ஆதிலின் உறவினர்கள் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சிலர் அப்பாவிகள் என, குடும்பத்தினர் புகார் கூறி உள்ளனர்.