| ADDED : மே 03, 2024 11:06 PM
தங்கவயல் : ''கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என, தங்கவயல் நகராட்சி ஆணையர் பவன் குமார் தெரிவித்தார்.தங்கவயல் நகராட்சி அலுவலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:கோடை வெப்பத்தில், பொதுமக்கள் சுகாதாரத்துடன் இருக்க கோலார் மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கி உள்ளார். வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை.தங்கவயல் நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு கோடை வெப்பம் 40 டிகிரி செல்ஷியஸை தாண்டியுள்ளது. இதனால் நகர மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். இந்த வெப்பத்தின் தாக்கம் வரும் 7ம் தேதி வரை அதிகமாகவே இருக்கும். தேவை இல்லாமல் யாரும் வெளியில் சுற்ற வேண்டாம்.குறிப்பாக காலை 11:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை வெப்பம் அதிகமாக இருக்கும். வெயிலில் சென்றால் தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படும். சில நேரங்களில் மூக்கு வழியாக ரத்தமும் கசியும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மலேரியா, காலரா, வாந்தி பேதியும் ஏற்பட வாய்ப்பும் உண்டு.எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ச்சியை தரும் இளநீர், பழரசம் பருகலாம்.மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உடல் சூட்டை அதிகரிக்கும் ஆடைகளை தவிர்ப்பது நல்லது. நிழல் உள்ள இடங்களில் ஓய்வெடுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.