உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காணாமல் போன இளம்பெண் 3 நாளுக்கு பின் கிணற்றில் மீட்பு

காணாமல் போன இளம்பெண் 3 நாளுக்கு பின் கிணற்றில் மீட்பு

கதக்,: கர்நாடகாவில் உள்ள கிராமத்தில் மாயமான இளம்பெண், மூன்று நாட்களுக்கு பின், வறண்ட கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.கர்நாடக மாநிலம், கதக் மாவட்டம், கஜேந்திரகாட்டின் தொட்டகன்டி கிராமத்தை சேர்ந்தவர் பார்வதி, 23.இக்கிராமத்தை சேர்ந்த வாலிபருடன், ஆறு மாதங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. கடந்த 20ம் தேதி, வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். காலையில் தோட்டத்துக்கு சென்றவர் இரவாகியும் வராததால், அச்சமடைந்த குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தனர். போலீசாரும் பல இடங்களில் தேடி வந்தனர்.இந்நிலையில், 22ம் தேதி அக்கிராமத்தின் வயல் பகுதியில் பணியாற்றி கொண்டிருந்தவர்கள், அங்கிருந்த தண்ணீரில்லாத வறண்ட கிணற்றில் இருந்து சத்தம் வந்ததை கேட்டு ஓடினர். கிணற்றுக்குள் பார்வதி அரைகுறை மயக்க நிலையில் விழுந்து கிடந்தார்.உடனடியாக, அவரை மீட்டு தண்ணீர், உணவு வழங்கி ஆசுவாசப்படுத்தினர். பார்வதி கூறியதாவது:சம்பவ தினத்தன்று தோட்டத்தில் பணி செய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஒரு பெண், திடீரென என் கழுத்தை பிடித்து, வீட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றார். பின், என் கண்களை கட்டி, கையை பிடித்து இழுத்து சென்றார். குறிப்பிட்ட துாரம் சென்றதும், கைகளை தட்டுமாறு கூறினார். நானும் தட்டினேன்.உடனே, அப்பெண் என்னை தள்ளி விட்டார். கீழே விழுந்ததில் மயக்கமாகி விட்டேன். கண் விழித்து பார்த்த போது, வறண்ட கிணற்றில் விழுந்திருந்தது தெரிந்தது. பலமுறை கூக்குரலிட்டும் யாரும் வரவில்லை.இவ்வாறு பார்வதி கூறினார்.பார்வதியை, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் கூறிய தகவல் உண்மை தானா, அவருக்கு மனநல பாதிப்பு ஏதும் உள்ளதா என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை