எம்.ஜே.க்யூ.ஆர்., டிக்கெட் அறிமுகம் மெட்ரோ ரயில் நிர்வாகம் புதுமை
பகர்கஞ்ச்:பயணியரின் வசதிக்காக எம்.ஜே.க்யூ.ஆர்.டி., எனும் டிஜிட்டல் டிக்கெட்டை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று அறிமுகப்படுத்தியது.க்யூ.ஆர்., முறையிலான டிஜிட்டல் டிக்கெட்டை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் விகாஸ் குமார் அறிமுகம் செய்து வைத்தார். மெட்ரோ பவனில் நடந்த எளிய நிகழ்ச்சியில் பல முறை பயணம் செய்வதற்கு வசதியான டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்பட்டது.எம்.ஜே.க்யூ.ஆர்.டி., எனப்படும் பயணச்சீட்டை இன்று முதல் பயணியர் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ சாரதி என்ற மொபைல் செயலி வாயிலாக இந்த பயணச்சீட்டை பயணியர் வாங்கலாம்.ஸ்மார்ட் கார்டுகளுக்கு மாற்றுத்திட்டமாக எம்.ஜே.க்யூ.ஆர்.டி., உருவாக்கப்பட்டிருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர். தவிர சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் கேடு விளைவிக்காத நட்பு முறையிலான பயணச்சீட்டு முறை இது என, மெட்ரோ நிர்வாகம் பெருமை கொள்கிறது.பயணச்சீட்டை வாங்க இனி பயணியர் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. முதற்கட்ட பதிவுத்தொகையாக 150 ரூபாய் வசூலிக்கப்படும். இதையும் பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.டிபாசிட் தொகை வசூலிக்கப்படவில்லை. டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடுத்த ரீசார்ஜ் குறைந்தபட்சமாக 50 முதல் அதிகபட்சமாக 3,000 வரை முன்கூட்டியே பணத்தை செலுத்தி, பயணச்சீட்டை உறுதி செய்து கொள்ள முடியும்.ஒருவேளை மொபைல் போன் இழந்துவிட்டாலும் புதிய மொபைல் போனில் பழைய கணக்கை தொடர முடியும்.