ஸ்டாக்ஹோம்: முதன்முறையாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டதால், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022 முதல் பரவத் துவங்கிய இந்த நோயானது முதலில் ஆப்ரிக்க நாடுகளில் பாதிப்பு கண்டறியப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d5zwvpxo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவசர நிலை
ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 517 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்தது.ஸ்வீடனில் ஒருவருக்கு உறுதி!
இந்நிலையில், தற்போதைய பரவலில், ஆப்பிரிக்கா கண்டத்துக்கு வெளியே முதன்முறையாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'ஸ்வீடனில் ஒரு நபருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று இருப்பதை நேற்று பிற்பகல் உறுதிபடுத்தினோம். சமீபத்தில் ஆப்ரிக்காவிற்கு பாதிக்கப்பட்ட நபர் சென்றுள்ளார். அப்போது தான் அவருக்கு குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளது' என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜாகோப் போர்ஸ்மெட் தெரிவித்தார்.தடுப்பூசி
ஐரோப்பிய நாடான டென்மார்க்கைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்கும், 'இமான்வேக்ஸ்' தடுப்பூசி பெரியம்மை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதே தடுப்பூசியை குரங்கு அம்மை நோய்க்கும் பயன்படுத்த ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்திருந்தது.
பாகிஸ்தானில் 3 பேருக்கு உறுதி
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் குரங்கு அம்மை தொற்று பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு வந்தவர்களை பரிசோதனை செய்ததில், அதில் 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் குரங்கம்பை பாதிப்பு தென்பட்ட நிலையில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்!
காங்கோ, மத்திய ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை பரவியுள்ள நிலையில், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. * காங்கோ, மத்திய ஆப்ரிக்காவில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் சோதனை செய்ய வேண்டும். * நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து வருவோரை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். * தோல் அரிப்பு, 2 முதல் 4 வாரம் காய்ச்சல், தலை, தசை, முதுகு வலி, சோர்வு ஆகியவை அறிகுறிகள். * குரங்கு அம்மை நோய் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக்கூடியது. * தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கும் நபரை உடனடி சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும். * பாதிக்கப்பட்டோருடன் நேரடி தொடர்பை தவிர்த்தல், தடுப்பூசி மூலமாக தற்காத்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இல்லை என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில்!
கடந்த 2022ல் இந்த நோய் பரவத் துவங்கிய போது, கேரளாவில் மூவருக்கு குரங்கு அம்மை உறுதியானது குறிப்பிடத்தக்கது.