புதுடில்லி,:டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, இண்டியா கூட்டணிக் கட்சியினர், புதுடில்லியில் நேற்று நடத்திய போராட்டத்தால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21ம் தேதி இரவு, அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள இண்டியா கூட்டணி சார்பில், புதுடில்லியில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.இதையடுத்து, போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் தீன் தயாள் சாலை வருமான வரித்துறை அலுவலகம் ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டனர்.மேலும், ஆம் ஆத்மி கட்சி சார்பில் டில்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மாபெரும் பேரணி நடத்தப்படுகிறது.இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி சுற்றுச் சூழல் துறை அமைச்சருமான கோபால் ராய் கூறியதாவது:ராம்லீலா மைதானத்தில் ஆம் ஆத்மி கட்சி நாளை நடத்தும் மாபெரும் பேரணியில், இண்டியா கூட்டணி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், சரத்பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், டெரிக் ஓ பிரைன், திருச்சி சிவா, பரூக் அப்துல்லா மற்றும் ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்தப் பேரணியில் 20,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். இதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா, இந்தப் பேரணி முடிவில் உரையாற்றுகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.