உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தவறான விளம்பரத்துக்காக மன்னிப்பு கேட்டது பதஞ்சலி

தவறான விளம்பரத்துக்காக மன்னிப்பு கேட்டது பதஞ்சலி

புதுடில்லி, தவறான தகவலுடன் விளம்பரம் வெளியிட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.பிரபல யோகா குருவான ராம்தேவ், 2006ல் பதஞ்சலி நிறுவனத்தை துவங்கி, ஆயுர்வேத மருந்துகள், உணவு பொருட்கள், சோப்பு உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். 'குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்களை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும்' என, அந்நிறுவனம் விளம்பரம் செய்தது. இதனால் தவறான விளம்பரங்களை செய்து வருவதாக பதஞ்சலி நிறுவனம் மீது இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த நீதிமன்றம், அந்த நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், சர்ச்சைக்குரிய விளம்பரங்களை நீக்கவும் உத்தரவிட்டது. ஆனாலும், இந்த விளம்பரங்கள் நீக்கப்படவில்லை. இதையடுத்து பதஞ்சலி நிறுவனத்தின் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய பதஞ்சலிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் பதில் மனு தாக்கல் செய்யாமல் அந்த நிறுவனம் காலம் கடத்தியது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று ராம்தேவின் உதவியாளரும், பதஞ்சலி நிறுவன மேலாண் இயக்குனருமான ஆச்சார்யா பால்கிருஷ்ணா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'சட்டத்தின் ஆட்சி மீது அதிக மரியாதை உள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரத்துக்காக மன்னிப்பு கோருகிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடப்படாது என்பதை நிறுவனம் உறுதி செய்யும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கின் விசாரணை, அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை