புதுடில்லி, அரசியல்வாதிகளின் வங்கிக் கணக்குகளை கண்காணிப்பது போன்ற சில நடவடிக்கைகளை எடுக்க, எப்.ஏ.டி.எப்., எனப்படும் சர்வதேச நிதி செயல்பாட்டு பணிக்குழு பரிந்துரை செய்து உள்ளது.நிதி செயல்பாட்டு பணிக்குழு, 1989-ல் உருவாக்கப்பட்ட, பன்னாட்டு அரசுகளுக்கு இடையேயான அமைப்பு. நடவடிக்கை
கருப்பு பண ஒழிப்பு, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளிப்பதை முறியடித்தல் ஆகியவற்றை கண்காணிக்கும் அமைப்பாக இது செயல்படுகிறது. இதில், நம் நாடு, 2010-ல் உறுப்பினரானது.ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசை தலைமையிடமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது. உறுப்பினர் நாடுகளின் நிதி செயல்பாடு குறித்த ஆண்டறிக்கையை இது தயாரிக்கும். இதன் அடிப்படையிலேயே, சர்வதேச நிதியமைப்புகள், கடன் கொடுக்கும் முடிவுகளை எடுக்கும்.பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் பதவி ஏற்றவுடன், கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள் துவங்கின. அடுத்தகட்டமாக, பணமோசடி தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாகின.கடந்த ஜ-ூன் மாதம், ஆசிய நாடான சிங்கப்பூரில் நடந்த நிதி செயல்பாட்டு பணிக்குழு கூட்டத்தில், இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.அதே நேரத்தில், உள்நாட்டு அரசியல்வாதிகளின் கணக்குகளை கண்காணிப்பது, என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளின் நிதிகளை கண்காணிப்பது, நிதி சாராத தொழில்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களை கண்காணிப்பது ஆகியவற்றில், குறிப்பிட்ட அளவுக்கே முன்னேற்றம் உள்ளதாகக் கூறப்பட்டது.இது தொடர்பான இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், இடைக்கால அறிக்கையை, நிதி செயல்பாட்டு பணிக்குழு மத்திய அரசுக்கு பகிர்ந்து உள்ளது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது:உள்நாட்டு அரசியல்வாதிகள், அவர்களுடைய குடும்பத்தார் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் வங்கிக் கணக்குகளை கண்காணிப்பதில் தீவிர நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவசியம்
ஊழல், லஞ்சம், மோசடிகள் வாயிலாக இவர்கள் அதிகளவு சொத்துக்களை குவிப்பதற்கு வாய்ப்புள்ளதால், அவர்களை கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்தெந்த வகைகளில் அவர்களுக்கு நிதி கிடைக்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும்.முக்கிய அரசு அதிகாரிகள், அவர்களுடைய குடும்பத்தார் கணக்குகளும் கண்காணிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மிக விரைவில் இது தொடர்பான அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.