பெங்களூரு: கர்நாடகாவில் தொடர் மழையால், மின் தேவை கணிசமாக குறைந்துள்ளது. மின் வினியோக நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன. வரும் நாட்களில் மின் தேவை மேலும் குறையும் என, அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.நடப்பாண்டு ஏப்ரல், மே மாதங்களில், கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. பல தாலுகாக்களில் வறட்சி ஏற்பட்டது. விவசாய பம்ப்செட்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. வீடுகளில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க, மின் விசிறி, ஏர் கூலர் பயன்படுத்தினர். இதன் விளைவாக கோடை காலம் துவக்கத்திலேயே, மின் தேவை ஏறுமுகமாகி, மின் வினியோக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்தது. அதிகரிப்பு
ஏப்ரலில் 8,381 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, மே மாதம் 8,444 மெகாவாட்டாக அதிகரித்தது. தேவைக்கு தகுந்தபடி மின்சாரம் சப்ளை செய்வது, மின் வினியோக நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. லோக்சபா தேர்தல் நடந்ததால், மக்களுக்கு மின் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஜூன் மாதம் மழை பெய்ய துவங்கியதால், மின்தேவை மற்றும் பயன்பாடு என, இரண்டும் குறைந்தது. தற்போது மின் தேவை 6,954 மெகாவாட்டாக குறைந்துள்ளது. மின் வினியோக நிறுவனங்கள் மீதான அழுத்தம் குறைந்துள்ளது.மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:கோடை கால துவக்கத்தில், வீடுகள், பம்ப்செட்டுகளுக்கு அதிக மின்சாரம் தேவைப்பட்டது. இதற்கு தக்கபடி மின்சாரம் சப்ளை செய்து, கோடை காலத்தை வெற்றிகரமாக சமாளித்தோம். பயன்பாடு குறைந்தது
தற்போது மாநிலத்தில் பரவலாக மழை பெய்வதால், பம்ப்செட்டுகள் பயன்படுத்தப்படுவதில்லை. வீடுகளில் மின்விசிறி, ஏர் கூலர் பயன்படுத்துவதும் குறைந்தது. எனவே மின் தேவை படிப்படியாக குறைந்துள்ளது. மழை இப்படியே தொடர்ந்தால், மின் தேவை , பயன்பாடு மேலும் குறையும் என, எதிர்பார்க்கிறோம்.மின் தேவை குறைந்ததால், அனல் மின் உற்பத்தி நிலையங்களில், சில யூனிட்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளோம். நீர் மின் உற்பத்தியும் திருப்திகரமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.