| ADDED : ஜூலை 30, 2024 07:42 AM
பெங்களூரு: ''ராமனின் பெயரை அழிக்க முயற்சிக்கின்றனர். இவர்களை ராமனே பார்த்துக் கொள்வார். ராம்நகரின் வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது,'' என, மாநில ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:என் தந்தை மத்திய அமைச்சர் குமாரசாமி, டாக்டர்களின் ஆலோசனைப்படி இன்று (நேற்று) ஓய்வில் இருக்கிறார். நாளை (இன்று) டில்லி செல்லும் வாய்ப்புள்ளது. லோக்சபா கூட்டத்திலும் பங்கேற்பார்.மாநில காங்கிரஸ் அரசுக்கு, ஓராண்டு கடந்துள்ளது. பொதுவாக நாங்கள், அரசு அமைந்து குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் கடந்த பின், பாதயாத்திரை, போராட்டம் நடத்துவோம். மாநில அரசு ஊழல்களில் மூழ்கியுள்ளது. எனவே அரசை கண்டித்து, நாங்கள் வீதியில் இறங்கி பாதயாத்திரை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தின் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எஸ்.டி., சமுதாயத்தினருக்கு சேர வேண்டிய 187 கோடி ரூபாயை, வேறு மாநிலங்களின் தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியுள்ளனர். இது பற்றி முதல்வரே சட்டசபையில் கூறியுள்ளார். இது கோப்புகளில் பதிவாகியுள்ளது.மற்றொரு பக்கம் மூடா முறைகேடு நடந்துள்ளது. இதில் முதல்வருக்கு நெருக்கமானவர்களே, தொடர்பு கொண்டுள்ளனர். பால் ஊக்கத்தொகை ஒன்பது ஆண்டுகளாக, 1,200 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.இதற்கு முன்பு காங்கிரஸ் அரசு இருந்தபோது, விவசாயிகள் தற்கொலை அதிகரித்தது. இப்போது மீண்டும் தற்கொலைகள் வெளிச்சதுக்கு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் விலை உயர்வு.டெங்கு போன்ற சிறிய நோயை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அவர்களின் தவறுகளை மூடி மறைக்க, சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த அரசு நீடிக்க தகுதியில்லை. எனவே சட்டப்படி போராட்டம் நடத்துகிறோம்.யார் தலையெழுத்தில், என்ன எழுதியுள்ளது என்பதை பார்க்கலாம். ராமன் பெயரை மாற்ற முற்பட்டுள்ளனர். இவர்களை ராமனே பார்த்துக் கொள்வார். ராம்நகரின் வரலாற்றை அழிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.