இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ.2,200 கோடி மோசடி: அசாமில் இரு இளைஞர்கள் கைது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
குவஹாத்தி: பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெற்று தருவதாகக் கூறி, அசாமில் 2,200 கோடி ரூபாய் திரட்டி மோசடியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர்.அசாம் மாநிலம் குவஹாத்தியைச் சேர்ந்தவர்கள் விஷால் புக்கான் மற்றும் ஸ்வப்னில் தாஸ். இவர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் 'யுடியூப்' சமூக ஊடகம் வாயிலாக, பங்கு சந்தை முதலீடுகள் பற்றிய வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அதில், வர்த்தகம் வாயிலாக பல கோடி ரூபாய் பணம், சொகுசு கார்கள் ஆகியவற்றை பெற்றதாகக் கூறி மக்களை ஈர்த்துள்ளனர்.அவ்வாறு முதலீட்டில் ஆர்வம் ஏற்பட்ட மக்களிடம், பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறியுள்ளனர். இதற்காக போலி ஆன்லைன் வர்த்தக செயலியை உருவாக்கி, மக்களை அதில் பணம் போடும்படி கூறியுள்ளனர்.இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பல ஆயிரம் பேர், 2,200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளனர். அவற்றை பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் போலி நிறுவனங்கள் துவங்கி அவற்றிலும், அசாம் சினிமா துறையிலும் இவர்கள் முதலீடு செய்துள்ளனர்.இரட்டிப்பு லாபம் வரும் என எதிர்பார்த்திருந்த மக்கள் போட்ட முதலும் கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தற்போது விஷால் புக்கான் மற்றும் ஸ்வப்னில் தாஸ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இந்த மோசடியில், பங்கு சந்தை தரகர்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு பங்கு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த மோசடிக்காக பயன்படுத்திய கணினி, மென்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். முதல்வர் விளக்கம்!பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு முதலில் டீமேட் கணக்கு துவங்க வேண்டும். செபி மற்றும் பங்கு சந்தைகள் அங்கீகரித்த தரகு நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே முதலீடோ, வர்த்தகமோ செய்ய முடியும். இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறும் வர்த்தக செயலிகள் அனைத்தும் மோசடியானவை. இவை போன்றவற்றில் இருந்து எப்போதும் விலகி இருங்கள். போலீசார் இந்த மோசடி குறித்து விசாரித்து வருகின்றனர்; பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என கண்டறியும் பணியில் உள்ளனர். --- ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,