உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச எம்.பி.,யை கொல்ல ரூ.5 கோடி கைமாறியது அம்பலம்

வங்கதேச எம்.பி.,யை கொல்ல ரூ.5 கோடி கைமாறியது அம்பலம்

கோல்கட்டா, வங்கதேச எம்.பி.,யை கொலை செய்ய, அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரது நெருங்கிய நண்பர், கூலிப்படையினருக்கு 5 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஆளும் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த எம்.பி., அன்வருல் அஸிம் அனார், கடந்த 12ம் தேதி, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவுக்கு வந்தார்.

மூவர் கைது

மருத்துவ சிகிச்சைக்காக வந்த அவர், வடக்கு கோல்கட்டாவின் பாராநகர் என்ற இடத்தில் உள்ள தன் நண்பர் கோபால் பிஸ்வாஸ் வீட்டில் முதல் நாள் தங்கினார். மறுநாள் டாக்டரை சந்திக்கச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. ஒரு சில தினங்கள் காத்திருந்த பிஸ்வாஸ், மே 18ல் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கோல்கட்டாவின் புறநகர் பகுதியான, 'நியூ டவுன்' என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எம்.பி., அன்வருல் கொலை செய்யப்பட்டுள்ளதாக வங்க தேச உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இந்த கொலை வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, மாநில சி.ஐ.டி., போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, சி.ஐ.டி., பிரிவு ஐ.ஜி., அகிலேஷ் சதுர்வேதி நேற்று கூறியதாவது:வங்கதேச எம்.பி., அன்வருல் அஸிம் அனார் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டியுள்ளனர். அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு, கலால் துறையில் பணியாற்றும் நபருக்கு சொந்தமானது. அந்த வீட்டை, அமெரிக்காவில் வசிக்கும் எம்.பி.,யின் நண்பருக்கு அவர் வாடகைக்கு விட்டுள்ளார்.அந்த வீட்டுக்கு தான் எம்.பி., கடைசியாக வந்துள்ளார். வீட்டில் ரத்தக் கறை படிந்திருப்பதை தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். நிறைய பாலித்தீன் பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட பின், அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பல்வேறு இடங்களில் வீசப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

விசாரணை

உடலின் சில பாகங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன. அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை அவரது உடல் முழுமையாக கைப்பற்றப்படவில்லை.இது திட்டமிடப்பட்ட படுகொலை. எம்.பி.,யின் அமெரிக்க நண்பர், அவரை கொலை செய்ய கூலிப்படையினருக்கு 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நண்பர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவர் தற்போது அமெரிக்காவில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை