பலி கொடுக்கும் வாக்குறுதிகள்
பெங்களூரு- ''வாக்காளர்களை பலி கொடுப்பதற்காகவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. எத்தனை இலவச வாக்குறுதிகள் வழங்கினாலும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி,'' என பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யான ஜக்கேஷ் தெரிவித்தார்.பிரபல கன்னட நகைச்சுவை நடிகரும், பா.ஜ., - ராஜ்யசபா எம்.பி.,யுமான ஜக்கேஷ், பெங்களூரு தெற்கு தொகுதி பிரசார கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். பா.ஜ., வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக அவர் பேசியதாவது:கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, ஐந்து வாக்குறுதி திட்டங்களை காங்கிரஸ் அறிவித்தது. ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டங்கள் நிறைவேற்றுவதாக தெரிவித்தனர்.திட்டங்கள் அமல்படுத்தியும், பெரும்பாலானோருக்கு சென்றடையவில்லை. காங்கிரஸ் கேரன்டிகளை யாரும் நம்பவில்லை. எத்தனை இலவச வாக்குறுதிகள் வழங்கினாலும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.இலவச திட்டங்கள் பெறுவோர், சுயமரியாதையை விற்று கொண்டதாக அர்த்தம். இலவச பஸ், 200 யூனிட் மின்சார திட்டங்களால் மக்களுக்கு நஷ்டம் தான். இதை புரிந்து கொள்ள வேண்டும்.ஆட்டை பலி கொடுப்பதற்கு முன்னர், ஊர்வலம் நடத்துவர். அதுபோன்று, நேர்த்திகடன் ஆட்டுக்கு மாலை அணிவித்து, ஊர்வலம் நடத்தப்படுகிறது. அந்த மாலைகள் தான் வாக்காளர்கள். அந்த வாக்காளர்களை பலி கொடுப்பதற்காகவே வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.