உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சி மாறுவோருக்கு பாடமாக திகழும் சதானந்தகவுடா

கட்சி மாறுவோருக்கு பாடமாக திகழும் சதானந்தகவுடா

லோக்சபா தேர்தலில் போட்டியிட 'சீட்' கிடைக்கா விட்டாலும், முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா அதிருப்தியில் பொங்கி எழாமல், அமைதியாக இருப்பதற்கு முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரே காரணம் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., சதானந்தகவுடா, மத்திய அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தார். இம்முறையும் அவர் போட்டியிட ஆர்வமாக காத்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. இத்தொகுதியில் மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் ஷோபா களமிறக்கப்பட்டுள்ளார். தனக்கு சீட் கை நழுவியும், சதானந்தகவுடா அதிருப்தி அடையவில்லை. மாறாக கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

சிரித்த முகம்

சதானந்தகவுடா எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். பல பதவிகளில் எளிதாக அமர்ந்தார். முதல்வர் பதவியை எதிர்பார்க்காத அவர், திடீரென முதல்வரானார். அரசியலில் அனைத்தையும் கரைத்து குடித்தவர். மத்தியில் ரயில்வே அமைச்சராக இருந்த போது, பல திட்டங்களை கொண்டு வந்தவர். செல்வாக்கு மிக்க தலைவரான இவருக்கு, பா.ஜ., மேலிடம் சீட் கொடுக்கவில்லை.இதனால் வருத்தத்தில் இருந்த அவர், பா.ஜ.,வுக்கு முழுக்கு போடுவார் என, ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். இவரை காங்கிரசுக்கு இழுக்க, முதல்வரும், துணை முதல்வரும் அதிகபட்சமாக முயற்சித்தனர். பா.ஜ.,வும் கலக்கமடைந்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. சதானந்தகவுடா இயல்பாக நடந்து கொள்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.அதிருப்தியில் பொங்கி எழுந்தால், என்ன நடக்கும் என்பது சதானந்த கவுடாவுக்கு நன்றாக தெரியும். இதை அவர் அருகில் இருந்தும் பார்த்தவர். இவரது நண்பர் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், சீட் கிடைக்காமல் பா.ஜ.,வுக்கு அதிருப்தி கொடியை காண்பித்துவிட்டு காங்கிரசுக்குதாவினார். தன் சீடர் மகேஷ் டெங்கினகாயியை எதிர்த்து போட்டியிட்டு தோற்றார். அதன்பின் இவரை, காங்கிரஸ் எம்.எல்.சி.,யாக தேர்வு செய்தது.

காங்கிரசுக்கு டாட்டா

ஆனால், அவரால் அந்த கட்சியின் சித்தாந்தங்களுடன், ஒன்ற முடியவில்லை. யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரசுக்கு 'டாட்டா' காண்பித்து, தன் தாய்க்கட்சியான பா.ஜ.,வுக்கு திரும்பினார். இதை உணர்ந்துள்ள சதானந்தகவுடா, பா.ஜ.,வை விட்டு விலக ஆலோசிக்கவில்லை.இது மட்டுமின்றி, அவர் ஒரு முறை சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தால், கட்சியை விட்டு விலகும் குணம் கொண்டவர் இல்லை. முதல்வர் பதவி உட்பட, பல்வேறு உயர் பதவிகளை தனக்கு கொடுத்த கட்சியை விட்டு செல்வது சரியல்ல என்பதை, அவர் உணர்ந்துள்ளார்.எனவே அவராகவே முன் வந்து, தேர்தலில் சீட் வேண்டாம் என, அறிவித்தார். ஷோபாவுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்கிறார். மற்ற தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை