புதுடில்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், தன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேருடன் டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அவர் பா.ஜ.,வில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன், பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அந்த கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.பின், ஜாமினில் வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். இதனால், சம்பாய் சோரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், அவர் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன.இந்நிலையில், சம்பாய் சோரன் டில்லியில் முகாமிட்டுள்ளார். அவருடன் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சம்ரா லிண்டா, தஷ்ரத் காக்ராய், சமீர் மொஹந்தி, சுக்ராம் உரான், ராம்தாஸ் சோரன் மற்றும் சஞ்சீவ் சர்தார் ஆகியோரும் டில்லியில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சம்பாய் சோரன், “என்ன வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. ''அது உண்மையா, பொய்யா என சொல்ல முடியாது. சொந்த காரணங்களுக்காகவே டில்லி வந்துள்ளேன்,'' என்றார். இந்த ஆண்டு இறுதியில் ஜார்க்கண்ட் சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சம்பாய் சோரன் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக பரவி வரும் செய்தி அம்மாநில அரசியலிலும், 'இண்டி' கூட்டணியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.