| ADDED : ஏப் 17, 2024 06:18 AM
விஜயபுரா, : ''ராகுல் பெயரை பயன்படுத்துவதால், காங்கிரசுக்கு ஓட்டுகள் கிடைக்காது,'' என பா.ஜ., மூத்த தலைவர் சி,டி.ரவி தெரிவித்தார்.விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:ஹிந்துக்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில், காங்கிரசுக்கு ஆதரவு கிடைக்காது. வரும் நாட்களில் இக்கட்சியினர் பாகிஸ்தானில், ஆதரவு தேடுவதை தவிர வேறு வழியில்லை. இதை மனதில் கொண்டு, அவர்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடுகின்றனர்.அமேதி தொகுதியில் வெற்றி பெற முடியாத காங்கிரசின் ராகுல், முஸ்லிம்கள் அதிகம் உள்ள கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.ராகுல் பெயரை பயன்படுத்துவதால், தன் வேட்பாளருக்கு கிடைக்கும் ஓட்டுகளை காங்கிரஸ் இழக்கிறது. இவர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. பா.ஜ.,வை போன்று பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, முதலில் காங்கிரஸ் கூறட்டும்.நபரை விட கட்சியே முக்கியம்; கட்சியை விட நாட்டின் நலன் முக்கியம். அதிருப்தியாளர்கள் விரைவில் சமாதானம் செய்யப்படுவர். மைசூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேசும் போது, மகளிர் காங்கிரஸ் தொண்டர்கள் கோஷமிட்டுள்ளனர். தேவகவுடாவின் கர்ஜனையை கேட்ட காங்கிரஸ், பெண்களை ஏவி விட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.