பொம்மை மகனுக்கு ஷிகாவியில் சீட்?
ஹாவேரி,: முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை எம்.பி.,யானதால், காலியான, ஷிகாவி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அவரது மகன் பரத் பொம்மை சீட் எதிர்பார்க்கிறார்.ஹாவேரியின், ஷிகாவி சட்டசபை தொகுதியில் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பசவராஜ் பொம்மை. இவர் நடப்பாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.பி.,யானார். இதனால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். காலியான ஷிகாவி தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.தொகுதியில் யாருக்கு சீட் கொடுப்பது என, பா.ஜ., மேலிடம் ஆய்வு நடத்தியது. எம்.பி., பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மைக்கு சீட் கொடுத்தால், வெற்றி வாய்ப்பு அதிகம் என, தெரிய வந்துள்ளது. தொகுதி தலைவர்களும், பரத்துக்கு சீட் தரும்படி ஆலோசனை கூறிஉள்ளனர்.இதற்கிடையே சில வாரங்களாக, பசவராஜ் பொம்மை, ஷிகாவியில் வெவ்வேறு சமுதாயத்தினரை சந்தித்து, மகனுக்காக ஆதரவு திரட்டுகிறார். பரத்தும் தேர்தலுக்கு தன்னை தயார்படுத்துகிறார். பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தவர். இவரது தந்தை எஸ்.ஆர்.பொம்மையும், முதல்வர் பதவி வகித்தவர். இவர்கள் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையான பரத், அரசியலுக்கு வந்துள்ளார். தேர்தலில் போட்டியிடவும் தயாராகிறார்.