| ADDED : ஜூன் 22, 2024 01:34 AM
உத்தம் நகர்: மேற்கு டில்லியில் வேலை செய்த வீட்டின் 14 வயது சிறுவனை ஏமாற்றி கடத்தி விலையுயர்ந்த பொருட்களைத் திருடிய வேலைக்காரப் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.மேற்கு தில்லியின் உத்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார். இவரது 14 வயது மகனை கடந்த வாரம் சனிக்கிழமை முதல் காணவில்லை. வீட்டில் இருந்த 500 கிராம் தங்க நகைகள், 5.70 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவையும் திருடு போயிருந்தது.வீட்டில் வேலை செய்த வேலைக்காரப் பெண்ணான சதர் பஜாரில் வசித்த மது சைனி, 40, என்பவரும் மாயமாகி இருந்தார். இதுகுறித்து போலீசில் 16ம் தேதி ராகேஷ் குமார் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டையை துவக்கினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மது சைனி குற்றவாளி என்பதை அடையாளம் கண்டனர்.கடந்த புதன்கிழமை இரவு சிறுவனை மீட்ட போலீசார், மது சைனியை கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'விரைவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, இந்த குற்றத்தை மது சைனி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. சிறுவனை மயக்கி அவனை திருடுவதற்கு துாண்டியுள்ளார். அவன் எடுத்து வந்த பணத்திலிருந்து விலையுயர்ந்த ஒரு போன் வாங்கியுள்ளார். அதையும் பறிமுதல் செய்துள்ளோம். பணம், நகைகள் மீட்கப்பட்டுள்ளன' என்றனர்.