யாத்கிர்: யாத்கிர் எஸ்.ஐ., மரணத்திற்கு காரணமான காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா தலைமறைவாகி விட்டனர். எஸ்.ஐ., குடும்பத்தினருக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆறுதல் கூறினார்.யாத்கிர் சைபர் கிரைம் போலீஸ் நிலைய எஸ்.ஐ., பரசுராம், 34. கடந்த 2ம் தேதி இரவு திடீரென உயிரிழந்தார். சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இருந்து, யாத்கிர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்ய, யாத்கிர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா ஆகியோர், பரசுராமிடம் 30 லட்சம் ரூபாய் கேட்டு, நெருக்கடி கொடுத்ததுடன், ஜாதியை சொல்லி திட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதனால், சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், பாம்பண்ண கவுடா மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. பரசுராம் தற்கொலை செய்ததாக உறவினர்கள் கூறியதால், வழக்கை, சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு மாற்றி உள்ளது. அரசியல் சாசனம்
நேற்று முன்தினம் காலையில் இருந்து தந்தை, மகன் மொபைல் போன்கள் 'சுவிட்ச் ஆப்' ஆகி உள்ளது. அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், நேற்று காலை யாத்கிர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு சென்ற, சி.ஐ.டி., அதிகாரிகள், அங்கு வேலை செய்யும் போலீசாரிடம் விசாரித்தனர். பின், பரசுராமின் சொந்த ஊரான கொப்பால், காரடகி சோமனாலா கிராமத்திற்கும் சென்று, குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.நேற்று மதியம் பரசுராம் வீட்டிற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் சென்றார். பரசுராம் பெற்றோர், அவரது மனைவி ஸ்வேதாவுக்கு ஆறுதல் கூறினார்.பின், அவர் அளித்த பேட்டி:எஸ்.ஐ., பரசுராம் மரண வழக்கில் மாநில அரசும், காவல் துறையும் நடந்து கொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. தலித் குடும்பத்தை சேர்ந்த பரசுராமுக்கு நியாயம் கிடைக்க, நாங்கள் போராடுவோம்.யாத்கிர் தொகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரி இருக்க கூடாது என்று, எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார் கூறியதாக, பரசுராமின் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனர்.அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனபடி பதவி ஏற்ற எம்.எல்.ஏ., ஒருவர் தலித் பற்றி இப்படி பேசுவது கேவலமான செயல். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தலித் அதிகாரிகள் இறக்கின்றனர். சி.பி.ஐ., விசாரணை
எங்கள் ஆட்சியின் போது, காவல் துறையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று, சட்டம் இயற்றினோம். ஆனால், அதை காங்கிரஸ் அரசு ஓராண்டாக குறைத்தது. சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இருந்து, டவுன் போலீஸ் நிலையத்திற்கு வந்த ஏழு மாதத்தில் பரசுராம் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டதுஏன்.பரசுராம் மரணம் குறித்து மாநில அரசு அவசர, அவசரமாக சி.ஐ.டி., விசாரணைக்கு கொடுத்து உள்ளது. இந்த விசாரணை எப்படி இருக்கும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.இதனால் வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும். எம்.எல்.ஏ., அவரது மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்.