| ADDED : ஏப் 05, 2024 12:34 AM
புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உட்பட 14 பேர், ராஜ்யசபா எம்.பி.,க்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். மத்திய அமைச்சர்கள் ஏழு பேர் உட்பட ராஜ்யசபா எம்.பி.,க்கள் 49 பேரின் பதவிக்காலம் கடந்த 2ம் தேதி முடிவடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட ஐந்து பேரின் பதவிக்காலம் நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில், புதிதாக 14 பேர் ராஜ்யசபா உறுப்பினர்களாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர், 14 பேருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராஜஸ்தானின் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்ற நிலையில், ஒடிசாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எம்.பி.,யாக பதவி ஏற்றார். காங்கிரஸ் தலைவர்கள் அஜய் மாகன் மற்றும் சையத் நாசர் ஹுசைன், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ., தலைவர் ஆர்.பி.என்.சிங், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பா.ஜ., உறுப்பினர் சாமிக் பட்டாச்சார்யா ஆகியோரும் ராஜ்யசபா எம்.பி.,க்களாக பதவியேற்றனர்.பீஹாரில் இருந்து ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் ஜா, ஒடிசாவின் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த சுபாஷிஷ் குன்தியா மற்றும் தேபஷிஷ் சமந்தாரி, ராஜஸ்தானின் பா.ஜ., தலைவர் மதன் ரத்தோர் ஆகியோர் புதிதாக பதவியேற்றனர்.