உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வினோத பிரச்னை! ஆண்கள் உட்கார இடமில்லாமல் அவதி: சீட் ஒதுக்குமாறு கண்டக்டர்களுக்கு உத்தரவு

வினோத பிரச்னை! ஆண்கள் உட்கார இடமில்லாமல் அவதி: சீட் ஒதுக்குமாறு கண்டக்டர்களுக்கு உத்தரவு

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், 'சக்தி' திட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். கர்நாடகாவில் வசிக்கும் பெண்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து, 'ஜீரோ' டிக்கெட் வாங்கி கொள்ளலாம். இலவச பயணம் என்பதால் அரசு பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. கர்நாடகாவின் தென்மாவட்டங்களில் வசிக்கும் பெண்கள் வடமாவட்டங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்கும், வடமாவட்டங்களில் வசிக்கும் பெண்கள் தென்மாவட்டங்களில் உள்ள ஆன்மிக தலங்களுக்கும், அரசு பஸ்களில் இலவசமாக வந்து செல்கின்றனர். பண்டிகை காலங்களில் அரசு பஸ்களில் சீட் பிடிப்பதில், பெண்களுக்கு இடையே குடுமிப்பிடி சண்டை கூட ஏற்படுகிறது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயணியருடன் சென்ற பஸ்களில் இப்போது பெண்கள் தலைகள் அதிகம் காணப்படுகின்றன.

நின்றபடி பயணம்

ஆண் பயணியருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளையும், ஆக்கிரமித்து அமர்ந்து கொள்கின்றனர். இதனால் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் ஆண் பயணியர் நின்று கொண்டே செல்லும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.இதனால், பாதிக்கப்பட்ட ஆண் பயணியர், தங்களுக்கும் இலவச பயண திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கும் பெண்களிடம் சென்று, 'இது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை, நீங்கள் எழுந்து கொள்ளுங்கள்' என்று ஆண் பயணியர் கேட்டாலும், பெண்கள் அதை காதில் போட்டு கொள்வது இல்லை. யாரிடமோ பேசுகின்றனர் என்பது போன்று அமர்ந்து விடுகின்றனர்.கண்டக்டர்களிடம், ஆண் பயணியர் புகார் கூறியும் எந்த பிரயோஜனமும் இல்லை. இந்த வினோத பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று, ஆண் பயணியர் சங்கத்தினர், அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

நெருக்கடி

இந்நிலையில், கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் மைசூரு மண்டல அதிகாரிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், 'கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் டிக்கெட் எடுத்து பயணிக்கும் ஆண் பயணியர் தங்களுக்கு சீட் கிடைப்பது இல்லை. பெண் பயணியர் ஆக்கிரமித்து உள்ளனர் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் ஆதங்கத்திற்கு மதிப்பு கொடுப்பது நமது கடமை.'இதனால், இனி பஸ்களில் ஆண் பயணியருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில், ஆண் பயணியர் அமர்ந்து செல்வதை டிரைவர், கண்டக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆண் பயணியர் இருக்கையில், பெண் பயணியர் அமர்ந்து இருந்தாலும், அவர்களிடம் எடுத்து கூறி, ஆண் பயணியருக்கு சீட் ஒதுக்கி கொடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது. சக்தி திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து, அரசின் நான்கு போக்குவரத்து கழகங்களும் நஷ்டத்தில் இயங்குவதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், இதை அரசு மறுத்து வருகிறது. 'பஸ்சில் நிறைய ஆண் பயணியரை ஏற்ற வேண்டும். அவர்களால் தான் வருமானம் கிடைக்கும்' என்றும், டிரைவர், கண்டக்டர்களுக்கு முன்பே உத்தரவிடப்பட்டு இருந்தது. இதனால், ஆண் பயணியர் எங்கு உள்ளனர் என்று பார்த்து, பார்த்து பஸ்சுக்குள் ஏற்றும் நிலைக்கு கண்டக்டர்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அவர்களுக்கு சீட் ஒதுக்கி கொடுக்கவும் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருப்பது, டிரைவர், கண்டக்டர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Easwar Samban
பிப் 25, 2025 08:46

நமது சென்னை MTC-ல் நாளுக்கு நாள் தகராருதான். ஆண்கள் அமருமிடம் என்பதை ஸ்டிகாகர் மூலம் தெரியப்படுத்த வேண்டும். தகராறு முற்றிய பின்புதான் நடவடிக்கை எடுப்பார்கள்நம்ப-MTC. இது எல்லோரும் அறிந்தது தானே. இதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அரசு தலையிட வேண்டும் போல.


சமீபத்திய செய்தி