பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், கர்நாடகாவின் ஐந்து எம்.பி.,க்களுக்கு, இடம் கிடைத்துள்ளது. முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட சோமண்ணாவை மத்திய அமைச்சராக்கியதன் பின்னணியில், அரசியல் நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.லோக்சபா தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இம்முறை கர்நாடகாவை சேர்ந்த ஐந்து எம்.பி.,க்கள், மத்திய அமைச்சரவையில் சேர்ந்துள்ளனர்.முதன் முறையாக, மாநில அரசியலில் இருந்து, தேசிய அரசியலுக்கு சென்ற சோமண்ணாவுக்கு, மத்திய அமைச்சராகும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.தொடர்ந்து நான்கைந்து முறை வெற்றி பெற்ற, கத்தி கவுடர், ரமேஷ் ஜிகஜினகிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் முறையாக வெற்றி பெற்ற சோமண்ணாவுக்கு பா.ஜ., மேலிடம் வாய்ப்பு அளித்துள்ளது. இதன் பின்னணியில், அரசியல் நோக்கம் இருப்பதாக பா.ஜ., வட்டாரங்கள் கூறுகின்றன.கடந்த 2023 சட்டசபை தேர்தலில், சாம்ராஜ் நகர், வருணா தொகுதிகளில் சோமண்ணாவை, மேலிடம் பலவந்தமாக களமிறக்கியது. இரண்டு தொகுதிகளிலும் அவர் தோற்றார். மேலிடம் கடிவாளம்
லிங்காயத் தலைவரான இவரது அரசியல் அத்தியாயம் முடிந்து விட்டது என, பலரும் கருதினர். சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, விஜயேந்திரா மீது சோமண்ணா பகிரங்கமாகவே அதிருப்தி தெரிவித்தார்.இந்நிலையில் பலரது எதிர்ப்புக்கு இடையிலும், லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில் இவருக்கு சீட் வழங்கப்பட்டது. உள்ளூர் தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றாலும், சோமண்ணா வெற்றி பெற்றார். தற்போது மோடி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார். இவரை மத்திய அமைச்சராக்கியதன் மூலம், எடியூரப்பா ஆதரவு கோஷ்டிக்கு பா.ஜ., மேலிடம் கடிவாளம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக எடியூரப்பா ஓட்டத்துக்கு, முட்டுக்கட்டை போடும் நோக்கம், இதில் அடங்கியுள்ளது. ஷோபா, சோமண்ணா, பிரஹலாத் ஜோஷி, பா.ஜ., தேசிய முதன்மை செயலர் சந்தோஷுடன் அடையாளம் காணப்படுகின்றனர். இதற்கு முன் ஷோபா, எடியூரப்பா கோஷ்டியில் இருந்தவர். அதிருப்தி
அங்கு தலைவர்கள் மீதான அதிருப்தியால், தற்போது சந்தோஷுடன் சேர்ந்துள்ளார். மூவருக்கும் மத்திய அமைச்சரவையில், இடம் கிடைத்திருப்பதை கண்டால், மேலிடத்தில் சந்தோஷின் கை ஓங்கியிருப்பது தெரிகிறது.ஆனால், இதை எடியூரப்பா ஆதரவாளர்கள் மறுக்கின்றனர். கர்நாடகாவில் தனி செல்வாக்குடன் திகழ்பவர் எடியூரப்பா. கட்சியில் இவரது பிடி குறையவில்லை. இதற்கு முன் இவருக்கு முக்கியத்துவம் அளித்த மேலிடம். இப்போது இவரது ஆதரவாளர்களை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள, சோமண்ணாவுக்கு வாய்ப்பு அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது.