ஷிவமொகா: பஸ்சில் இருக்கைக்காக பெண்கள் அடித்துக் கொண்டனர். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல், வெறுப்படைந்த நடத்துனர், பஸ்சை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.பெண்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக, கர்நாடக அரசு 'சக்தி' திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில், பெண்கள் மாநிலம் முழுதும் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் பயணியர் எண்ணிக்கை, இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகரித்ததால், பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பலவிதமான பிரச்னைகளை சந்திக்கின்றனர். இவர்கள் பயணியரால் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன.பஸ்களில் இருக்கைக்காக பெண்கள், பரஸ்பரம் உடைகளை கிழித்து, செருப்பால் அடித்துக் கொண்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இது போன்ற சம்பவம் ஷிவமொகாவில் நடந்துள்ளது.சாகரா பஸ் நிலையத்தில் இருந்து, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஒன்று, பயணியரை சுமந்து கொண்டு, நேற்று முன் தினம், இரவு 7:30 மணிக்கு ஷிவமொகாவுக்கு புறப்பட்டது.பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில், இருக்கைக்காக, பெண்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் வசைபாடினர். பெருங்குரலில் கூச்சலிட்டனர். இவர்களை சமாதானம் செய்ய நடத்துனர், ஓட்டுனர் முயற்சித்தும் பயனில்லை.பெண்களின் கூச்சல் அதிகரித்ததால், வெறுப்படைந்த நடத்துனர் பஸ்சை, நேராக போலீஸ் நிலையத்துக்கு விடும்படி கூறினார். ஓட்டுனரும் சாகரா போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ்சை கொண்டு வந்தார். மகளிர் ஏட்டுகள், பஸ்சில் சண்டை போட்ட பெண்களை கீழே இறக்கினர். பஸ்சை கொண்டு செல்லும்படி கூறியதால், ஓட்டுனர் ஷிவமொகாவை நோக்கி புறப்பட்டார்.அதன்பின் சண்டை போட்ட பெண்களை, சமாதானம் செய்து புத்திமதி கூறி அனுப்பினர்.